வாழ்ந்து பார்த்த தருணம்…43

அடுக்குமாடி குடியிருப்பில் அலையும் ஆங்கில Dog…

அடுக்குமாடி குடியிருப்பு இந்த வார்த்தை இன்று பலபேரின் கனவுகளில் சஞ்சரித்து அவர்களின் மனதில் அலைபாய வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தை. எனக்கு தெரிந்த அளவில் இப்போதிருந்து சுமார் பதினைந்திலிருந்து இருபது வருடங்களுக்கும் முன்பு இருக்கலாம் என நினைக்கிறேன். அந்த சமயம் தான் IT எனச் சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையும் அறிமுகமாகி வளர்ச்சியடைய தொடங்கிய காலக்கட்டம். சென்னைப் போன்ற அசுர வளர்ச்சியை நோக்கி நகரும் பெருநகரங்களில், ஒரு நடுத்தர குடும்பத்துக்கு சொந்த நிலத்துடன் தனியான வீடு என்பது கனவாக இருந்தது. அப்படியான நேரத்தில் அந்தக் கனவை பூர்த்தி செய்கிறேன் என்கிற ரீதியில் தொடங்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம். நடுத்தர வர்க்கத்தின் கனவை மிகப்பெரும் அளவில் நனவாக்க போகிறது என்ற மிகப்பெரும் மாயை உருவாக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போலான சூழலும் தகவல் நுட்ப துறையின் வாயிலாக உருவாக, புற்றீசல் போல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தள்ளப்பட்டன. கட்டுமான துறைக்குள் இந்தியாவின் பெரும்பாலான மிக பெரும் நிறுவனங்களின் பார்வை திரும்பும் அளவுக்கான அசூரத்தனமான வளர்ச்சி. அது எந்த அளவுக்கு அசூர வேகத்தில் வளர்ந்தது என்றால். ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்து அரசிடம் அனுமதி வாங்கியவுடன் தினசரி செய்தித்தாள்களில் விளம்பரம் வரும். கட்டத்துக்கான அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்டிருக்கும், சில இடங்களின் அதுவும் கூட இருக்காது.

இப்படி செய்தித்தாளில் விளம்பரம் வந்தவுடன், அதில் எத்தனை குடியிருப்புகள் கட்டப்பட போகிறது என்பது சொல்லப்பட்டிருக்கும். அந்த விளம்பரம் வெளியாகி அந்த செய்தித்தாள் மக்களின் பார்வைக்கு வந்த சில மணி நேரங்களிலே, அதில் பெரும் பாலான வீடுகளூக்கு முன் பணம் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு முன்னனி நடிகரின் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, அந்தத் திரைப்படத்துக்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடங்கும் நாளில், தொடங்கிய சில மணி நேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான நுழைவுச் சீட்டு தீர்ந்து போய்விடும். அதைப் போலான ஒரு சூழல் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கவும் இருந்தது என்று சொன்னால் நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் உண்மை அது தான். கட்டுமான நிறுவனமும் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து பெருமளவு முதலீடு செய்யாமல், மக்களிடமிருந்து பெறப்படும் முன் பணத்திலேயே மொத்த குடியிருப்பையும் கட்டிக்கொடுத்துவிடும் சூழல் தான் நிலவியது. இதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பு என்ற கலாச்சாரம் தொடங்கி முதல் பத்து வருடங்களுக்கு மட்டுமே. இன்று அது போன்ற சூழல் இல்லை. மீண்டும் பழைய நிலைமை போல் அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடும் மற்றும் அங்கே குடியிருப்பதற்க்கான வாடகையுமே நடுத்தர வர்க்கத்தால் கொடுக்க முடியா இடத்துக்கு போய்விட்டது.

இப்படிப்பட்ட நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு சமூகத்துக்குள் போக வேண்டும் என்பது இன்றைய பல நடுத்தர வர்க்கத்துக்கான கனவு. இந்த சூழலிருந்து அடுக்குமாடி குடியிருப்பு சமூகம் எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். சென்னை மற்றும் பெங்களூர் இந்த இரண்டு பெருநகரகங்களிலும் அடுக்குமாடி குடியிருப்பு சமூகத்துக்குள் சில காலங்கள் இருந்தோ, சென்றோ வந்திருக்கிறேன் என்ற அடிப்படையில், அந்தச் சமூகத்தை பார்த்து உள்வாங்கியது தான். பொதுவாக நாம் நம் குடும்ப விழாவுக்கோ அல்லது நண்பர்களுக்கான குடும்ப விழாவுக்கோ செல்லும் போது, அந்த விழாவில் நெடுநாட்களாக பார்க்க முடியாத யாரையாவது பார்க்க நேரிட்டால், உடனடியாக மனம் கொள்ளா ஆனந்தத்துடன், அவர்களிடம் போய் வாங்க எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் செளக்கியமா என கேட்டு, உரியவர்களின் கைப்பற்றி அவர்களோடு மிகுந்த பூரிப்புடன் அளவளாவி கொண்டிருப்போம் இல்லையா. குடியிருப்பு சமூகத்துக்குள் அப்படியெல்லாம் சட்டென போய் எப்படி இருக்கீங்க என கேட்டுவிடக்கூடாது. முதலில் ஹாய் என்ற வார்த்தை அவர்களை பார்த்தவுடன் உதிர்க்க வேண்டும், அதுவும் அந்த ஹாயை எப்படி உச்சரிக்க வேண்டுமென ஒரு முறை இருக்கிறது. ஹாஹாய்ய்ய்ய்ய்ய்ய் என நீளமாக இழுத்தபடி முகம் கொள்ளா சிரிப்பு ஒன்றை வரவழைத்து கொள்ள வேண்டும். அந்த முகபாவணைக்குள் ஆச்சர்யமான புருவ உயர்வுகள், பற்கள் தெரிந்தும் தெரியா வண்ணம் ஒரு சிரிப்பு என்று பல்வேறு படிநிலைகள் இருக்கிறது. அதில் கண்டிப்பாக முகபாவணை இயல்பாக இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. சரி ஹாய் சொல்லிவிட்டீர்கள், அடுத்ததாக நீங்கள் சொல்ல வேண்டியது, பார்த்து எத்தனை நாளாச்சு என்றபடி அவர்களிடம் போய் சின்னதாக கட்டித்தழுவல் இருக்க வேண்டும். அதுவும் கட்டிபிடித்த மாதிரியும் இருக்க வேண்டும், அதே சமயம் கட்டிபிடிக்காத மாதிரியும் இருக்க வேண்டும். ஈயம் பூசுண மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற வசனத்தை மனதில் இருத்திக் கொள்ளுதல் நலம்.

இப்படியான விசாரிப்புகளை தொடர்ந்தபடி பேச்சுக்கு இடையே கண்டிப்பாய் Oh, Wow, Is it, Realy, Beautiful, Marvelous போன்ற வார்த்தைகளை கண்டிப்பாய் அது அதற்கூரிய இடத்தில் மிகச்சிறப்பான முகபாவணைகளுடன் இணைத்தபடியே பேசவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் உங்களின் உடல்மொழியை மிகச்சிறப்பானதாய் வெளிப்படுத்தியபடியே பேச வேண்டும். அடடா மிக முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். நீங்கள் சென்னையிலிருந்தாலும், பெங்களூரில் இருந்தாலும் உங்களுக்கு தமிழோ, கன்னடமோ தெரிந்திருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாய் ஆங்கிலம் கட்டாயம் தெரிந்தே ஆகவேண்டும். அதுவும் எந்தளவு உங்களால் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் சஞ்சரித்தபடி பேச முடியுமா, அந்த அளவு உங்களின் மதிப்பு பல மடங்கு கூடும். மேலே சொன்ன உடல்மொழி, சிரிப்பு இன்ன பிறவுடன் சேர்ந்து ஆங்கிலமும் தெரிந்திருந்தால் மிக, மிக நலம். இதையெல்லாம் படித்து கற்றுக்கொள்ள நினைத்தால் யோசிக்காமல் ரஷ்ய எழுத்துலகின் பீதாமகர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கும் சூதாடி என்ற புத்தகத்தை வாங்கி படித்துவிடுங்கள். அந்த புத்தகத்தில் மிக, மிகத் தெளிவாக ஒரு சூதாட்ட விடுதிக்குள் நுழையும் மேல்தட்டு மக்களின் உடல்மொழியிலிருந்து, நடை, உடை, பாவணை என அனைத்தைப் பற்றியும் மிக, மிக விரிவாக தஸ்தாயெவ்ஸ்கி எழுதி தீர்த்திருப்பார். மிக, மிகச் சிறப்பான நாவல் அது. எனக்கு படிக்கும் பழக்கமில்லை என்று சொல்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது டைட்டானிக் திரைப்படம், அந்த திரைப்படத்தில், பிரதான நாயகியாக வரும் ரோஸின் கதாபாத்திரம் ஒரு முறை கப்பலின் உணவகத்தில், ஒரு சிறுமிக்கு அவருடைய தாய் மேல்தட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும், அணுகுமுறைகளையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருப்பார், அந்த காட்சியை திரும்ப, திரும்பப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

கடைசியாக, ஒரு வேளை உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் குடி போய்விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களின் நிலையை விளக்க, ஒரே ஒரு சம்பவத்தை சொன்னால் புரிந்துவிடும். அடுக்குமாடி குடியிருப்பில் உங்களின் வீட்டில் இருந்து காலையில் துயில் எழுகிறீர்கள், காலாற நடக்கலாம் என நினைத்து வெளியில் வருகிறீர்கள். சரி, இப்பொழுது தான் கவனிக்கிறீர்கள், ஏற்கனவே அங்குள்ள பல வீடுகளில் இருந்து பல கனவான்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி நடைபயிற்சி செல்லும் சில கனவான்களின் கூடவே அவர்கள் செல்லப்பிராணியும் நடைபயிற்சி சென்று கொண்டிருக்கும். அதை பார்த்தவுடன் உங்களின் ஆர்வம் பிறீட்டு எழும்பி அங்கு சென்று கொண்டிருக்கும் செல்லப்பிராணி ஒன்றிடம் போய் நீங்கள் எதோ கேட்கிறீர்கள். அதுவும் தமிழில். அது உங்களை மதிக்கவே மதிக்காது. நீங்கள் ஏன் செல்லப்பிராணி நம் பேச்சை கேட்கவில்லை என யோசிக்கும்போது, அதனை கூட்டிச்செல்லும் கனவான் உங்களிடம் My pet only understand english language என்று சொல்வார் பாருங்கள். அப்பொழுது உங்களின் மனதில் என்ன தோன்றினாலும் நீங்கள் அமைதியாக இருந்தால் அதுவே ஒஷா அடிக்கடி குறிப்பிடுவாரே அந்த ஜென் நிலை. இந்த உலகத்தில் ஒரு நாயை, மன்னிக்கவும் Dogயை ஆங்கில மொழி மட்டுமே தெரிந்த ஆங்கில அடிமையாக மாற்றிய பெருமை, சச்சிதானத்தின் கவிதை வரிகளில் வருவது போல் நினைவில் காடுள்ள மிருகத்தையே சேரும், அந்த அற்புதமான மிருகம் வேறுயாருமல்ல மனிதன் மனிதன் மனிதன் மட்டுமே… மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *