வாழ்ந்து பார்த்த தருணம்…47

ஐயோ, எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா…

மேலே சொல்லியிருக்கும் இந்த வார்த்தையை, பல நேரங்களில் பலர் சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் மேலே சொன்னதில் வேலை என்ற வார்த்தைக்கு, இவர்கள் அடுக்கும் வேலைகளை கேட்டால் தலைச்சுற்றிவிடும். ஒரு சின்ன உதாரணம். அதிகாலையில் சீக்கிரமாக எழுவது ஒரு வேலை. எழுந்த பிறகு பல் தேய்ப்பது அதைவிட பெரிய வேலை. அதன் பிறகு உடல் கழிவை வெளியேற்றுவது மிகப்பெரிய வேலை. குளிப்பது அது தான் இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இப்படி அடுக்கிக் கொண்டே போனால் எங்கே போய் முட்டுவது. இதில் சிறிதாவது உடற்பயிற்சியா வாய்ப்பேயில்லை. என்னது என்ன போய் காலை எந்திரிச்சு உடம்ப போய் வளைக்க சொல்லுறீங்க என்ற பதிலை கேட்டவுடன், வேறென்ன சொல்வது என தெரியாமல் விழி பிதுங்கித் தான் நிற்க வேண்டும். அதே அவர்களிடம் போய் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்வதை கேட்டால் மயக்கமே வந்துவிடும்.

மேலே சொன்ன வேலைகள் அனைத்தையும் மிகப் பெரும் உடல் உழைப்பை கொடுத்து செய்துவிட்டு வந்து நின்றுகொண்டு, நான் ஜெயிச்சு காட்டுறேன் பாரு என ஏக வசனத்தில் சவால் விடும் போது, அதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல், ஒரு மைய நிலையில் நிற்போம் பாருங்கள். முடியல சாமி, முடியல. அதைத் தாண்டி தங்களின் முன்னேற்றத்திற்கு உதாரண புருஷர்களாக இவர்கள் காட்டும் நபர்கள் எல்லாம் வேறு ஒரு தளத்தில் இருப்பவர்கள். அதற்கும் உதாரணம் காந்தி, அப்துல்கலாம், டோனி, தெண்டுலுக்கர். இந்த நிலையில் இருப்பவர்களை தான் தங்களின் ஆதர்சனமாக இவர்கள் நம்முன் காட்டும் போது, கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர வேறு வழியே இல்லை. இதில் இவர்களின் கனவு வீடு, கனவு நான்கு சக்கர வாகனம், கனவு உடை, கனவு வெளிநாட்டுப் பயணம் என இந்த பட்டியல் தனியானது மட்டுமல்லாமல். தனித்துவமானதும் கூட. இந்தப் பட்டியலில் இருக்கும் வீட்டை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்களிடம் நீங்க கனவில் உருவாக்கி வைத்திருக்கும் வீட்டைக் கட்ட, நீங்கள் இப்பொழுது வசிக்கும் ஊரில், எந்த பகுதியில், எந்த இடத்தில் கட்ட முடிவு செய்திருக்கிறீர்கள். அந்தப் பகுதியில் இருக்கும் இடம் இன்றைய தேதிக்கு என்ன விலைக்கு போகிறது எனக் கேட்டால், கண்டிப்பாக மேலே கேட்கப்பட்ட எந்த ஒரு அடிப்படையான கேள்விக்கும் கூட பதில் தெரியாது என்பது தான்.

அடுத்த வேலை சாப்பாட்டுக்கு இல்லையென்றால் கூட, தினசரி பேப்பரையாவது எதோ ஒரு வகையில் வாசித்து கொண்டிருந்த சமூகம் இது. அதை கொஞ்சம், கொஞ்சமாக சிதைத்து காட்சி வடிவத்தை மட்டுமே பார்க்கும் சமூகமாக. இந்தச் சமூகத்தை மாற்றி. இந்தச் சமூகத்தின் கற்பனை திறனை, சுயசிந்தனையை, தன்னிலையறிதலை, சுயமுன்னேற்ற சிந்தனையை, மொழி அறிவை, பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மையை எனச் சொல்லி கொண்டே போகலாம். அனைத்தையும் தூக்கி ஒரு ஓரமாய் கிடாசிவிட்டு, நான் பெருவெற்றி பெற வேண்டும். ஆனால் நான் எதிலும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என சொல்லிக்கொண்டிருக்கும் குரல்களை கேட்கையில். ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் வேடிக்கை தான் பார்க்க வேண்டி இருக்கிறது. வாசிப்பு என்ற விஷயம் என்றைக்கு குறைந்து போனதோ, அன்றைக்கு இந்த மாதிரியான மனநிலை சிறிது சிறிதுதாக தலைத்தூக்க ஆரம்பித்துவிட்டது. மேலே இவர்கள் சொன்ன ஆதர்ச நாயகர்களில் இருந்து ஒருவரை எடுத்துக் கொண்டு கேள்வி ஒன்றை கேட்டுப்பாருங்கள். உதாரணமாக டோனிய சொல்லுறீங்களே, அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வர எதையெல்லாம் தாண்டி வந்தாருங்கறத பத்தி ஏதாவது படிச்சீங்களா என கேட்டால். இல்ல டோனி படம் பார்த்தேன் அப்படியே புல்லரிச்சிருச்சு. அப்பவே சொரிஞ்சு விட்டுக்கிட்டே அவர மாதிரி நானும் பெரிய ஆளா வரணும் முடிவு பண்ணிட்டேன். இனி என்னோட வளர்ச்சிய யாராலும் தடுக்க முடியாது என இவர்கள் சொல்லி சிரிப்பதைப் பார்க்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். டோனி மாதிரி தான, அதையும் தாண்டி நீங்க வேற லெவல்ல வருவீங்க என கைகுலுக்கி விட்டு, அதுவும் கைவலிக்கா வண்ணம் குலுக்கி விட்டு வர வேண்டியது தான். வேற வழி(லி). மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *