வாழ்ந்து பார்த்த தருணம்…52

காற்றே பரவா பயணம்…

பயணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான பகுதி. பயணம் தான் மனிதனை இந்த பூமி பந்தின் அனைத்து இடங்களுக்கும் பற்றிப் படர வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை பயணித்தல் என்பது மனித வாழ்வின் நீக்கவே முடியாத அங்கமாக ஆகிவிட்டது. பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களும், ஏன் மரம் செடிகொடி உட்பட, அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது. முன்னர் எல்லாம் நெடுந்தூரம் பயணிக்கும் ஒருவரை கடவுளுக்கு சமமாக மதிக்கும் பாங்கு இருந்திருக்கிறது. அதனால் தெற்கிலிருந்து காசிக்கும், வடக்கிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் நடந்தே வந்திருக்கிறார்கள், அப்படி நடந்து வருபவர்களை தங்களின் வீடுகளில் உணவளித்து தங்கிசெல்ல அனுமதித்திருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு உணவளித்து உபசரிப்பது பெறும்பேறு என்பது ஆழ்ந்த நம்பிக்கை. காரணம், இப்படியான பயணத்தின் போது, அந்த மனிதன் எதிர்கொள்ளும் அனுபவத்தின் வழியே வாழ்வின் மீதான புரிதல் முற்றிலும் மாறிவிடும். மிகவும் பக்குவப்பட்ட மனிதனாக மாறிவிடுகிறான். அப்படியான பயணத்தில், பல்வேறு வகையான நிலப்பரப்புகள், எதிர்கொள்ளும் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், உணவு எனத் தான் உள்வாங்கும் அனைத்தும் மிகப்பெரும் அனுபவப் பாடமாக மாறும்போது, அந்த அனுபவமே வாழ்வை எதிர்நோக்கும் உந்து சக்தியாக மாறும்.

இப்படி பயணத்தின் வழியே மனிதனுக்கு கிடைத்து கொண்டிருந்த அனுபவ பாடத்தை, தன்னுடைய கண்டுபிடிப்புகளின் வழியே கொஞ்சம், கொஞ்சமாக மனிதன் இழந்து கொண்டே வருகிறான். அதனால் தான் இன்று பலபேருக்கு நடப்பது என்றாலே கசக்கிறது. சில ஆண்டுகளுக்கும் முன்பு வரை பயணம் பேருந்திலும், தொடர்வண்டியிலும் மற்றும் குளிர்சாதன வசதியில்லாத நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவரை நன்றாகவே இருந்தது. இன்று அப்படியே தலைகீழ் பெரும்பாலான மக்கள் இன்று குளிர்சாதன வசதியுடன் இருக்கும் பயணத்தையே விரும்புகிறார்கள். அதனால் என்ன பிரச்சனை எனக் கேட்டால், கொஞ்ச நஞ்சமல்ல நிறைய்ய்யய்ய இருக்கிறது. முதலில் இப்படி குளிருட்டப்பட்ட வாகனத்தில் நாம் செல்லும் பயணத்தில் இந்த பூமிக்கும் நமக்குமான தொடர்பு அறுபடுகிறது. எளிதான உதாரணமாக சொல்லவேண்டும் என்றால். ஒரு சிங்கம் காட்டுக்குள் தன்னுடைய குடும்பத்துடன் கம்பீரமாக காட்டை சுற்று வருவதற்கும். அதுவே அதே தன்னுடைய குடும்பத்துடன் கூண்டுக்குள் இருந்து கொண்டு வெளியுலகை பார்ப்பதுற்குமான வேறுபாடு. என்ன சிங்கம் தன்னை தானே கூண்டுக்குள் அடைத்துக் கொள்ளாது. மனிதன் தான் அறிவாளி ஆயிற்றே அதனால் தன்னைத் தானே அடைத்துக்கொள்கிறான். என்ன ஒரே ஒரு வசதி. இது கொஞ்சம் நவீனமான வசதியான நகரும் கூண்டு அவ்வளவே. அது கூண்டாகவே இருந்தாலும், அது குளிருட்டப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது தான் இன்றைய மனிதனின் அடிப்படை விருப்பம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, நாம் பயணிக்கும் வாகனம் அது எதுவாக இருந்தாலும். அந்த வாகனத்தின் ஜன்னலோர இருக்கையும், அதன் வழியே அந்த வாகத்தினுள் பரவும் காற்றும் நம் மனநிலையை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்லும். அப்படி பயணிக்கையில் மிக வேகமாய் நம் முகத்தை வருடி பரவும் அந்தக் காற்று கொடுக்கும் உற்சாகம், அது தரும் ஒரு விதமான உன்னத மனநிலை, அந்த நேரத்தில் மனதிற்குள் தோன்றும் சிலிர்ப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். என்ன எழுதினாலும் அப்படியான மனநிலையை விளக்கிட முடியாது. அது ஒரு பேரனுபவம். அது அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உணரப்படக்கூடியது. அப்படியான மனநிலையில் நாம் பயணிக்கையில், கூட வரும் எந்த ஒரு நபருடனும், அது குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம் அல்லது நட்பு வட்டமாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும் பயணத்தின் இடையின் பரஸ்பர உரையாடல் அட்டகாசமாகவும், உற்சாகமாகவும் முழுக்க, முழுக்க நேர்மறையாகவும் இருக்கும். ஆனால் இன்று வாகனத்தில் ஏறிய மறுநொடி, கதவின் கண்ணாடிகளை முழுமையாய் மூடி முடிக்கும் முன்னரே குளிர்சாதனத்தை இயக்கிவிட்டுத்தான் மறுவேலையே. வெளிக்காற்று தப்பிதவறி உள்ளே வந்துவிடக்கூடாது. வெளியில் காற்றில் மாசு அதிகமாக இருக்கிறது என்று காரணம் சொன்னாலும், காற்றிலிருக்கும் மாசு அடங்கி சுத்தமாய் இருக்கும் இடங்கள் வந்த பிறகு கூட, கதவின் கண்ணாடிகளை கீழ் இறக்க மனம் வருவதில்லை. நம்முடைய உடம்பும் மனதும் அந்த செயற்கை குளிருட்டியின் சொகுசுக்கு பழகிவிட்டது. இன்றைக்கு நம்முடைய குழந்தைகளுக்கும் சுத்தமான பயணம் என்ற பெயரில், வெளிப்புற காற்றினை சுவாசிக்க விடா பயணத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்புறம் எப்படி நம்முடைய உடல் எல்லாவிதமான தட்பவெட்ப நிலையிலும் சீராக இயங்கும். உறுதியான உடலாய் மாறும். நோய் எதிர்ப்பு சக்தியும் எப்படி வலுப்பெறும். பாதுகாப்பான பயணம் என்ற பெயரில் நம்முடைய உடலுக்கும், அடுத்த தலைமுறையின் உடலுக்கும் செய்துகொண்டிருக்கும் மிகப்பெரும் துரோகம் இது. இவ்வளவையும் செய்துவிட்டு கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல், இயற்கை சுத்தமாக இல்லை அதனால் தான் வியாதி அதிகமாக வருகிறது என பழித்துக்கொண்டே இருப்போம்.
மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *