வாழ்ந்து பார்த்த தருணம்…55

கேட்காமலே போன எங்கேயோ கேட்ட குரல்…

முன்குறிப்பு : இது கொஞ்சம் சற்றே நீளமான கட்டுரை, ஆதலால் நேரத்தை படித்து வீணடிக்க விரும்பாத வித்வான்கள் தவிர்த்தல் நலம், மகிழ்ச்சி…

மீண்டும் ஒரு முறை தேவனின் கோவில் பாடல் பற்றி எழுத்தாளர், வசனகர்த்தா இப்படி பலதரப்பட்ட முகங்களை கொண்ட சுகாவின் கட்டுரையை வாசித்தேன். என் மனதினுள் எப்போழுதெல்லாம் அந்த கட்டுரை பற்றிய எண்ணமோ அல்லது தேவனின் கோவில் பாடல் ஒலிக்க தொடங்கும் போதோ, சுகா எழுதியிருக்கும் இரு கட்டுரைகளையும் தேடி வாசித்து விடுவேன். ஒவ்வொரு முறையும் படித்து முடிப்பதற்குள் கண்டிப்பாக கண்களில் நீர் திரண்டு விடும். இந்த முறை கண்டிப்பாக அழவே கூடாது என்றேல்லாம் யோசிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என் மனதின் ஈரத்திடமும், கண்களின் ஈரத்திடமும் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறேன். இதை எழுதுவதற்கு முன்னால் படிக்கும் போதும் அப்படியே. ஒரு திரை இசை பாடலும், அதை சார்ந்த ஒரு எழுத்தும் எப்பேர்ப்பட்ட வலிமையோடு இருந்தால், அது ஒவ்வொரு முறை படிக்கும் போது ஆன்மாவை உலுக்கி எடுக்கும் என பலமுறை யோசித்திருக்கிறேன். நேரம் இருப்பவர்கள் கீழ் உள்ள இந்த இணைப்பில் சென்று படித்துக் கொள்ளுங்கள், (http://venuvanam.com/?p=434) (http://venuvanam.com/?p=38) சில வருடங்களுக்கு முன்பு. அப்பொழுதைய சூழலில் பாடல் கேட்க வேண்டுமென்றால் வானொலி மட்டுமே என்று இருந்த நாட்களில், பாடலை நாம் கவனித்து கேட்ட விதமே வேறு. அது மாதிரி சமயங்களில், குறிப்பாக, இரவில் ஊரே அடங்கி நிசப்தமான அந்த இருளுக்குள் கவிழ்ந்திருக்கும் போது, எங்கிருந்தோ ஒரு வானொலியில் இருந்தோ, ஏதாவது விசேஷ வீட்டின் ஒலிப் பெருக்கியில் இருந்தோ ஒரு பாடல் காற்றில் கரைந்தபடி வந்து, அப்படியே நம் காதுகளுக்குள் புகுந்து நம்முடைய ஆன்மாவை கரைய வைக்கும். சத்தியமாய் அப்படியான இரவையும், அந்த பாடலையும் மறக்கவே முடியாது. அந்த இரவு முழுவதுமே அந்த ஒற்றை பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படியான உன்னதமான நினைவுகள் ஒரு பக்கம் என்றால். அந்நாட்களில் வானொலியில் பாடலை ஒளிபரப்பு செய்யும் முன்னதாக அந்தப் பாடல் இடம்பெறும் திரைப்படங்களின் பெயர்களையும், இசையமைப்பாளர்களின் பெயர்களையும், பாடலை பாடியவர்களின் பெயர்களையும் சொல்லும் போதே உடல், மனம் இரண்டுமே பாடலைக் கேட்க தயாராகும் பாருங்கள். அது ஒரு உன்மத்த நிலை. ஒரு தவம் மாதிரி.

மேலே உள்ள வரிகளை படித்துவிட்டு, ஏன் ஒரு திரைப்பட பாடலுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியானம் என்று உங்களுக்கு தோன்றினால். என்னிடம் அதற்கான பதில் இல்லை. அது ஒரு அட்டகாசமான, உன்னதமான உணர்வு. அப்படியான உணர்வை நீங்கள் உணர்ந்து பார்க்காதவரை அதனை பற்றிப் பேச ஒன்றுமில்லை. இளையராஜாவும், விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இந்த சமூகத்தை எப்படியான மனநிலையில் வைத்திருந்தார்கள் என்பதை, அவர்களின் இசையை கேட்டு, ரசித்து, வளர்ந்த தலைமுறையினரிடம் கேட்டுப்பாருங்கள். திரைப்பட இசையின் வழியே மனித மனதை மனிதத்தோடு வைத்திருந்தவர் இளையராஜா. சொந்த ஊரை விட்டு வெளிநாடுகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று வாழ்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இளையராஜாவின் பாடல் அவர்களின் மனதினுள்ளும், உடலினுள்ளும் எப்படிப்பட்ட ரசவாதம் செய்யும் என்று. கதை, கதையாக சொல்வார்கள். இளையராஜாவும், விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இசையின் உச்சத்தில் இருந்த சமயங்களில். அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும் யாரையும் மனிதனை மனிதனாய் உணரவைக்கும். இன்று நம்மிடம் அற்றுப்போனது அது தான். இளையராஜா என்ற ஒருவர் இல்லாவிட்டால் என்றைக்கோ செத்துப்போயிருப்பேன் என எத்தனையோ பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். ஒரு மனிதனின் தோள் தொட்டு, அவனை அரவணைத்து, அசுவாசப்படுத்தி, அவனுள் இருக்கும் ஈரத்தை அவனுக்கு உணர்த்தி கொண்டே இருப்பார் இளையராஜா. சமீபத்தில் கூட இளையராஜா பங்கேற்ற ஒரு கல்லூரி விழாவில், அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் மேடையேறி, தனக்காக தென்றல் வந்து தீண்டும் போது பாடலை பாட வேண்டும் என இளையராஜாவிடம் பாடச் சொல்ல. அந்தப் பாடலை இளையராஜா பாட ஆரம்பித்த சில நொடிகளில், அந்த கல்லூரி மாணவியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவரால் தன்னுடைய அழுகையை அடக்கவே முடியவில்லை. மேடையிலே அழுத படியே அந்த பாடலுக்காக இளையராஜாவிடம் நன்றி சொல்லிபேசிக் கொண்டிருந்தார். மேலே சொன்ன நிகழ்வின் காட்சிகள் யூடுப்பில் தேடினால் கிடைக்கும் தேடிப்பாருங்கள். அப்படியான ஆன்மாவை உலுக்கும் இசையின் வழியே ஈரத்தை நம்மனதினுள் தக்கவைத்தபடி இருப்பது தான் இளையாராஜாவின் இசை.

திரைப்படத்தின் பாடல்களை கேட்பதே பெரும் பாக்கியம் என்ற காலம் இருந்தது. அப்படியான காலத்தில் பாடல் கேட்பதென்றால் குறைந்த பட்சம் வானொலி வேண்டும். அது பெரும்பாலும் கொஞ்சம் வசதியாக வாழும் குடும்பத்தினரிடம் மட்டுமே இருக்கும். அவர்கள் பாடல் கேட்கும் சமயங்களில் மட்டுமே நாமும் கேட்டுக்கொள்ளலாம். பிற்காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாற்றம் வர ஆரம்பித்தது. அப்புறம் ஒலிநாடா, அப்புறம் குறுந்தகடு என மாறி மாறி, இன்று எல்லோர் கையிலும், எந்த நேரத்திலும் கேட்டுக்கொள்ளலாம் என்ற அளவில், நாம் வைத்திருக்கும் அலைப்பேசியிலேயே எல்லாமும் வந்துவிட்டது. காட்சி வடிவிலும் பாடலை பார்த்துக்கொள்ளலாம் என்பது உட்பட. இன்று பாடல் வெளிவருவதற்கு முன்னால் செய்யப்படும் விளம்பர வியாக்கியானங்களுக்கு அளவே இல்லை. கண்டிப்பாக அப்படி மிகப்பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி வெளிவரும் பாடல்களும் எந்த ரகத்தில் இருக்கிறது எனப் பார்த்தால், அது வெறும் கொண்டாட்ட மனநிலைக்கு மட்டுமே என்ற ரகத்தில் தான் இருக்கிறது. அப்படி கொண்டாட்டத்தோடு வெளிவரும் பாடலின் ஆயுட்காலம் என்பது, இதே விளம்பர வியாக்கியானங்களுடன் அடுத்த பாடல் எப்போழுது வெளிவருகிறதோ அதுவரை மட்டுமே. இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் இன்னும் 10 & 15 வருடங்கள் கழித்தும் இன்றைய தலைமுறை இதே மனநிலையுடன் லயித்து கேட்குமா, பதிலை உங்களிடமே விடுகிறேன். அதே போல் நாம் இன்றைக்கு கேட்கும் பாடல்களில் ஆன்மா இருக்கிறதா?, அதையும் தாண்டி ஒரு பாடலை முழுவதுமாக நிறுத்தி நிதானமாக ஆழ்ந்து லயித்து கேட்கும் மனநிலையும் நேரமும் வாய்க்கிறதா?. பாடலை துல்லியமாக கேட்பதற்கான தொழில்நுட்பத்தில் மிகவும் மேன்மையான சாதனங்கள் எத்தனை எத்தனையோ வந்தும் விட்டன. நாமும் அப்படியான சாதனங்களை தேடித் தேடி வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டோம். ஆனால், இன்றைக்கு ஒரு பாடலுக்கான ஆயுட்காலம் எவ்வளவு, அப்படியே இன்றைக்கு பெரும் புகழ் பெரும் ஒரு பாடல் நம் காதுகளின் வழியே நம்முடைய ஆன்மாவை சென்றடைகிறதா. நம்முடைய மனதை அது மனிதத் தன்மையோடும், ஈரத்தோடும் வைத்திருக்கிறதா இப்படியான கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. அப்படியே மீறி அழுத்திக் கேட்டால் பாட்ட கேட்டுட்டு ஆடிட்டு போவீங்களா, அதவிட்டுட்டு மனசு, ஈரம், மனிதம், மண்ணாங்கட்டின்னு போங்க என பதில் வரும். மகிழ்ச்சி.

பின்குறிப்பு : மீண்டும் ஒரு முறை, இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் காதல் வசப்படும் ஒருவர், அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். பெரும்பான்மையாக கண்டிப்பாக எதிர்பாலினத்தை காயப்படுத்தமாட்டார்கள். பெரும்பாலும் தன்னை தானே காயப்படுத்திக்கொள்வார்கள். அதைத் தாண்டி தன்னையே மாய்த்துக்கொள்வார்கள். தற்கொலை என்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. என்றாலும் அந்த வலியை தனக்குள் மட்டுமே சுமக்கும் மனநிலையும், எதிர்பாலினத்தை காயப்படுத்தாத பாங்கும் இன்றைக்கு இருக்கிறதா, ஆயிரம் முறை நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி இது. இதற்கும் இளையராஜாவின் இசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள். சுகாவின் தேவனின் கோவில் பாடலை பற்றிய இரு கட்டுரைகளையும் பொறுமையாக படித்துப்பாருங்கள். அப்படியும் உங்களுக்கு புரியவில்லையெனில் உங்களிடம் பேச எனக்கும் ஒன்றுமில்லை. உங்களுக்கும் ஒன்றுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *