வாழ்ந்து பார்த்த தருணம்…58

இயற்கையின் சமநிலையை குலைத்தாயிற்று, அடுத்தது…?

இந்த பூமியில் வாழும் அனைத்து ஜிவராசிகளுக்கும் பொதுவான மிக, மிக முக்கிய அடிப்படை நோக்கம் ஒன்று உண்டு. இந்த பூமி பந்தின் மீதான தன்னுடைய இருத்தலை, தன்னுடைய இன விருத்தியின் வழியே அழிந்து போகாமல் தக்க வைக்க வேண்டும் என்பது தான் எல்லா ஜிவராசிகளுக்கும் பொதுவான அந்த நோக்கம். அதனால் தான் உலகின் எந்த ஒரு உயிரினமும் தன்னுடைய குட்டிக்குளுக்கோ, குஞ்சுகளுக்கோ எதாவது ஆபத்து என்றவுடன் எந்த எல்லைக்கும் சென்று அதனை காப்பாற்ற எத்தனிக்கின்றன. தன்னுடைய இன இருந்தல் என்பது இந்த இயற்கையின் சுழற்சிக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனைத்து விலங்கினங்களும், ஜிவராசிகளும் புரிந்தே வைத்திருக்கின்றன. அதனால் தான் உயிர் வாழ, தன்னுடைய இருப்பை தக்க வைக்க, தன் முன் எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் அதனை எதிர்த்து நின்று, இந்த பூமியின் உயிரியல் சமநிலையை ஓரளவுக்கேணும் அந்த உயிரினங்களால் தக்க வைக்க முடிகிறது. நீங்கள் இணையத்தில் தேடினால் தன் குட்டிகளை காப்பாற்ற, அதனை அக்கறையுடன் வளர்க்க எல்லா ஜிவராசிகளும் எப்படியெல்லாம் அரணாக நிற்கின்றன என்பதை பல்வேறு காணொளிகளில் காண முடியும். ஆனால் மனிதன் என்பவன் மட்டும் இந்த உயிரியல், சமநிலை, இயற்கை, பல்லுயிர் பெருக்கம் என்பதை பற்றி பெரும்பாலும் அலட்டிக்கொள்ளாமல், இந்த பூமியின் மீது நின்று கொண்டு, தான் செய்யும் அனைத்து விதமான செயல்களுக்கும், வளர்ச்சி என்ற பெயரில் நியாயமும் வியாக்கியானமும் கற்பித்துக் கொண்டே வருகிறான்.

மேலே சொல்லப்பட்ட இருத்தலை தக்கவைத்தல் என்ற விஷயத்தில் நாம் நாளுக்கு நாள் அதன் முக்கியதுவத்தையும், அது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதையும் பற்றி கவலையேபடாமல், மிக மோசமான சுயநலவாதிகளாக மாறிக்கொண்டே வருகிறோம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னதாக கூட நாம் இப்படி இல்லை. பெரும்பாலும் இங்கே ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது, ஐந்திலிருந்து ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்து. அத்தனை குழந்தைகளையுமே அக்கறையுடனும் கவனிப்புடனும் வளர்த்தார்கள். காரணம் அன்றிருந்த பெண்களும் சரி, ஆண்களும் உடல் ஆரோக்கியம் என்ற விஷயத்திலும் சரி, தங்களின் வாழ்வியல் சார்ந்த பொறுப்புகளிலும் சரி. மிக, மிக அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் இருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ். ஐந்து, ஆறு குழந்தைகள் என்ற நிலை போய் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற நோக்கத்திற்காக இரண்டாகி அப்புறம் ஒன்றாகி போனது. அதன் பின் அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இன்றைய புத்தம் புதிய தலைமுறையில் ஒன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய உடல்திறன் அற்ற தலைமுறையாகவோ, அல்லது அதையும் தாண்டி குழந்தையே வேண்டாம் என்ற தலைமுறையாகவோ உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு குறும்படம் பெரிய அளவில் பரப்பாக இணையமெங்கும் பகிரப்பட்டது. அந்த குறும்படத்தின் பிரதான களன் பெண்ணியத்தை இன்றைய பெண்கள் எப்படி புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதாக இருந்தாலும், அதில் இன்றைய தலைமுறை ஆணும், பெண்ணும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான விஷயம் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பது தான். இதனை வெறும் குறுப்படத்திற்காக சொல்லப்பட்டது என்று புறக்கணிக்க முடியவில்லை. நிதர்சனமும் இதைத் தான் பிரதிபலிக்கிறது.

குழந்தை பெற்றுக்கொள்வதிலும் இன்றைய நிலையை யோசித்தால் மெர்சல் திரைப்படத்தில் மருத்துவரான எஸ்.ஜே. சூர்யா ஒரு காட்சியில் சொல்வாரே, இப்ப வேணும்னா அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறப்பதை பார்த்து ஆச்சர்யமா வாயை பிளக்கலாம். பதினைந்து வருடம் கழித்து அப்ப உள்ள நிலைமைக்கு சுகப்பிரசவம்னா ஆச்சர்யமா வாயப்பொளப்பாங்க என்பார். இன்று அது தான் முற்றிலும் உண்மை. மனிதனின் உடல் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய சொந்த இனத்தையே உருவாக்கும் தன்மையை இழந்து கொண்டே வருகிறது. இது ஒரு புறம் என்றால் பத்து மாதம் வரை பொறுத்து, பாதுகாத்து, அக்கறையுடன் தன்னையும், வயிற்றுக்குள் வளரும் தன்னுடைய குழந்தையையும் வளர்த்தெடுக்கும் பொறுமை சுத்தமாக இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. அப்படியே பத்து மாதம் சுமந்து வளர்த்தாலும், வலியே இல்லாமல் குழந்தை வெளிவந்து விட வேண்டும் என்று பெரும்பாலும் பெற்றோர்களே அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள் என்னால் வலி தாங்க முடியாது என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு சிறு நகரங்களில் இருந்து பெரு நகரங்கள் வரை பராபட்சம் இல்லாமல், குழந்தையின்மையை போக்கும் மருத்துவமனைகளும் சரி, அறுவைசிகிச்சையின் வழியே குழந்தை பிறப்பை மிகச் சிறப்பாய் செயல்படுத்தும் மருத்துவமனைகளும் பல்கி பெருகிக் கொண்டே இருக்கின்றன. அந்த மருத்துவமனைகளின் மூலம் நடைபெறும் வணிகம் எவ்வளவு எனக் கணக்கெடுத்தால் நாடு தாங்காது. போகிற வேகத்தை பார்த்தால் இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் நம்மால் முடியாது. எங்களுடைய உயிரணுவை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கூடத்தில் வைத்து பாதுக்காத்து பத்து மாதம் கழித்து எங்களிடம் கொடுங்கள் என்றும் சொல்லும் நிலை வெகுதூரத்தில் இல்லை. மேட்ரிக்ஸ் என்று ஒரு திரைப்படம் வந்தது ஞாபக இருக்கிறதா மக்களே. இல்லையென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள். அந்தத் திரைப்படத்தில் மிகப்பெரும் ஆய்வுக்கூடம் ஒன்றினுள் லட்சக்கணக்கான குழந்தைகளை இப்படித்தான் வளர்ப்பதாக காட்சிப் படுத்தியிருப்பார்கள். அப்படியான காட்சியை கண்ணால் காணும் பாக்கியம் இந்த தலைமுறைக்கு வெகு சீக்கிரமாகவே வாய்க்கப் போகிறது. வாழ்த்துகள். குழந்தைகளை பெற்றுக் கொள்ள மறுக்கும் புதிய தலைமுறை மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரும் வேண்டுகோள். இனி மேலாவது விலங்கினத்துடன் உங்களை ஒப்பிட்டு பேசி, விலங்கினங்களின் உயரிய பண்புகளை சிறுமை படுத்த வேண்டாம். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *