வாழ்ந்து பார்த்த தருணம்…65

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 03

இது ஒரு தொடர்க்கட்டுரையின் மூன்றாம் பகுதி. ஆதலால் முதல் இரண்டுக் கட்டுரையை படிக்காதவர்கள் படித்து விடுங்கள். இது போன்ற நேரத்திலும் படிக்க நேரமில்லையெனில், உங்களின் பரபரப்பான வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி மட்டுமே நகரும் உங்களின் நேரத்தை என்னுடைய எழுத்தின் வழியே வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. உங்களின் பரபரப்பான நேரத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். பொதுவாக ஒரு திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமான நாயகன் கதாப்பாத்திரத்தை விட, அதற்கு எதிர் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தில் எதிர் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதத்திலும் அதகளம், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜெவியர் பார்டம் நடிப்பிலும் அதகளம். சரி விஷயத்தைத் தொடங்கலாம். இங்கே ஆங்கில படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அதிகம். அப்படியான ஆங்கில பட பார்வையாளர்கள் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்து பாண்ட் வரிசை படத்தையாவது பார்த்திருப்பார்கள். தொடர்ச்சியாக பாண்ட் படத்தை பார்க்கையில் அதன் மையச்சரடாக இழையோடும் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுகொள்ள முடியும். அந்த முக்கியமான விஷயம், இதுவரை வந்த அனைத்து பாண்ட் படங்களிலுமே பெண் கதாபாத்திரம் என்பது ஜேம்ஸ் பாண்டுக்கு வெறும் நுகரும் பொருள் மட்டுமே. பெண்ணை ஒரு நுகரும் பொருளாக பயன்படுத்தி சர்வசாதாரணமாக கடந்து போகும் பாண்ட் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் பார்வையாளன், குறிப்பாக ஒரு ஆண் தானும் அப்படியொரு கதாபாத்திரமாக இருக்கமாட்டோமா என்று தான் ஏங்குவான். அப்படியான ஏக்கத்தோடு திரையரங்கை விட்டு வெளிவரும் ஒருவன் தான் காணும் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான். இது ஒரு பக்கம் என்றால் பாண்ட் கதாபாத்திரத்தை போலான ஒருவன் தான் தனக்கானவனாக வரவேண்டும் என விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு மனநிலையுமே இந்த சமூகத்தில் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தும் என யோசித்தால், இன்றைய சமூகம் எப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது எனப் புரியும்.

பாண்ட் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது வல்லரசு எனும் பதத்தை பற்றி யோசித்தால், ராக்கி திரைப்படத்தின் வழியே பெரும் புஜபல பராக்கிரமசாலியை உருவாக்கியாயிற்று. அதனையும் மூன்று பாகங்களில் உலகம் முழுக்க விதைத்தாயிற்று. அந்த பராக்கிரமசாலி முன்னேரே பார்த்தது போல் சில்வஸ்டர் ஸ்டோலன் தான். அடுத்ததாக அந்த பராக்கிரமசாலியான ஸ்டோலன் கைகளில் ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு சுபயோக வருடத்தில் அந்த வரிசையில் ஸ்டோலனை பலசாலியாக மட்டும் இல்லாமல் ஆயுதங்களையும் கையாளும் திறன்மிக்க ஒருவனாக 1982ல் ஃபர்ஸ்ட் பிளட் எனும் திரைப்படத்தின் மூலமாக திரையில் உலவவிடுகிறார்கள். 1972ல் டேவிட் மோரல் எழுதிய நாவலை தான் அந்த நாவலின் பெயரான ஃபர்ஸ்ட் பிளட் என்பதையே திரைப்படத்தின் பெயராகவும் வைத்து வெளியாகிறது. இதிலும் மிகத் தெளிவாக ஸ்டோலன் கதாபாத்திரத்தை முதல் படத்திலே நிறைய ஆயுதங்கள் எதையும் கையாளாக்கூடியவனாக காட்டாமல், தன்னுடைய உடல்பலத்தின் வழியே சண்டையிடும் ஒரு ராணுவ வீரனின் கதையாக எடுக்கப்படுகிறது. கதைப்படி வியட்நாம் போரில் ஈடுபட்ட ராணுவ வீரன் ஒருவன், அந்த போரின் தாக்கம் காரணமாக மனதளவில் தளர்வடைந்து, அமைதியைத் தேடி, சொந்த நாட்டின் ஒரு கிராமத்திற்கு வருகையில், அங்கு உருவாகும் ஒரு பிரச்சனையை எப்படி கையாள்கிறான் என்ற பின்னனியில் நகரும் கதை. திரைப்படத்தின் அடிநாதமாக, முதலில் அந்த பலசாலி கதாபாத்திரம் எதிரியிடம் சிக்கிகொண்டு எப்படிப்பட்ட சித்தரவதை அனுபவித்தாலும், எந்தவித சித்தரவதையையும் தாங்குவான் என்பதை பல வடிவங்களிலும் காட்சி படுத்தி விடுகிறார்கள். அதிலும் கூட அவன் முதலில் மோதும் எதிரி தனது சொந்த நாடான அமெரிக்காவிடம் தான். ஆட்டம் ஆரம்பமாகிறது. தன்னுடைய சொந்த நாட்டு காவல்துறையிடமே மாட்டி சித்தரவதைக்கு ஆளாகி பின்னர் தப்பித்து, அமெரிக்க காவல்துறையால் இந்த பராகிரமசாலியை ஒன்றும் செய்யமுடியாமல், பின்னர் ராணுவம் வந்து அந்த ராணுவத்தையும் துவசம் செய்கிறான் என போகும் கதை. தாங்கள் உருவாக்கும் நாயகன் முதலில் தங்கள் ராணுவத்தின் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டுகிறான் என்பதின் வழியே தங்களின் ராணுவத்தின் திறனை பறைசாற்றும் அதே நேரத்தில், அந்த ராணுவதாலேயே ஒன்றும் செய்ய முடியாத வீரன் என்ற பிம்பம் கட்டமைப்பட்டு விடுகிறது.

1985ல் அதன் அடுத்த பாகம் நாயக கதாபாத்திர பெயரான ரேம்போ என்ற பெயரை இணைத்துக்கொண்டு ஃபர்ஸ்ட் பிளட் 2 வெளியாகிறது. படத்தின் பெயருக்கு நிகராக கதாபாத்திர பெயரும் புகழ்பெற வேண்டும் என்பது தான் நாயகனின் பெயரை திரைப்படத்தின் பெயருடன் இணைக்கக் காரணம், அதையும் தாண்டி நாயக பிம்பத்தின் பின்னால் கட்டமைப்படுவது அமெரிக்கா என்ற நாட்டின் பிம்பம். அமெரிக்கா என்றால் சர்வ வல்லமைபடைத்த நாடாக கட்டமைக்கப்படும் அதே நேரத்தில், தன் எதிரிகளாக கருதும் எதையும், எந்த நாட்டையும் தாக்கி அழிக்கும் வல்லமை அமெரிக்காவுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை கட்டமைப்பதே நோக்கம். கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறதா என்று யோசித்துக்கொள்ளுங்கள். கணக்கு சரியாக தான் வரும். ஏனென்றால் கணக்கு அப்படி. இரண்டாம் பாகத்தின் கதை வியட்நாம் ராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ராணிவத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மீட்டுவரவேண்டும் என்பது தான் நாயகன் முன்வைக்கப்படும் சவால், அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் எதிரிநாடாக உலகிற்கு காட்டப்பட்டது வியட்நாம் நாடு தான் என்பதை நினைவில் கொள்க. முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டிலுமே திரைக்கதையில் ஸ்டோலனின் பங்களிப்பும் உண்டு. இரண்டாம் பாக திரைக்கதையில் முக்கிய பங்காளி ஜேம்ஸ்கேமரூன், ஆங் ஞாபகம் வருகிறதல்லாவா, அவரே தான் டைட்டானிகின் அவதார இயக்குநர் ஜேம்ஸ் கேமருனே தான். சரி படத்தின் கதைப்படி இரண்டாம் பாகத்தில் ஒற்றை ஆளாக எப்படி வியட்நாம் நாட்டுக்குள் நுழைந்து, அந்த நாட்டு ராணுவத்தை தனியாளாக சமாளித்து, அமெரிக்க அதிகாரியை மட்டுமில்லாமல், அந்த ராணுவத்திடம் சிக்கியிருக்கும் பல அடிமைகளை எப்படி மீட்டு வருகிறான் என்பதை பார்வையாளன் வாய்ப்பேயில்லை என வாயைபிளந்து பார்க்கவைக்க என்னனென்ன மாயாஜாலம் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்து வியட்நாம் என்ற நாட்டை உலகத்திற்கே எதிரிநாடாக வெகுசிறப்பாக கட்டமைத்தது தான் ராம்போ ஃபர்ஸ்ட் பிளட் 2 திரைப்படம். அந்த காலகட்டத்தில் படம் பார்த்த அனைவரது மனதிலும் கண்டிப்பாக ஸ்டோலனின் ராம்போ கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அதுவும் திரைப்படத்தின் விளம்பர சுவரோட்டிகளில் மேலாடை அணியாமல் சின்ன ஏவுகணை தாங்கிய துப்பாக்கியை கைகளில் ஏந்தியபடி நிற்கும் ஸ்டோலனின் பாத்திரம் கொடுத்த அதிர்வு இந்த நிமிடம் வரை அடங்கவில்லை. இப்பொழுது புரிகிறதா நம்முடைய நாயகன்கள் ஏன் சட்டைகழட்டியபடி சுவரொட்டிகளில் சிரிக்கிறார்கள் என, அதையெல்லாம் தாண்டி உடற்பயிற்சி என்பது என்றைக்குமே உழைப்பாளிக்கு அவசியமே இல்லை. நம்முரில் அப்படியான உழைப்பாளிகளின் உடம்பின் கட்டமைப்பை பார்த்தாலே தெரியும். அதுவும் போக பல வருடங்களாக இங்கே இருந்த உடல் உழைப்பின் மீதான நேர்மறை பார்வையை மாற்றி, அப்படியான உழைப்பாளிகளை அடிமைகளாக நினைகக்கூடிய மனோபாவத்தை வளர்த்துவிட்டு, அப்படி உடல் உழைப்பு இல்லாதவர்கள் கூட தங்களின் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நம்முடைய நாட்டில் இயல்பிலேயே இருந்த பராம்பரியமான உடற்பயிற்சிகள் பலவற்றை மறக்கடித்து, சிக்ஸ்பேக் என்ற வார்த்தையில் மயங்கிய சுயத்தின் அருமையை மதிக்காத, உணராத தலைமுறையை முதல் முதலில் உருவாக்கிய பெருமை ஸ்டோலனின் ஃபர்ஸ்ட் பிளட் வரிசை படங்களுக்கே உண்டு. அந்த திரைப்படம் வருகையில் குறைவாக இருந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்றைக்கு உங்களின் உடல்மீது அக்கறை கொள்ளுங்கள் என்ற பெயரில் பல்வேறு விதத்திலும் நம்மிடமிருந்து எவ்வளவு பெரிய பொருளாதாரத்தை மத்தியதர மக்களிடம் இருந்து இந்தியா முழுமைக்கும் ஊறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களின் கற்பனைக்கே எட்டாத அளவு இருக்கும். மகிழ்ச்சி.

கடைசியாக வன்முறையின் ருசி :
ஃபர்ஸ்ட் பிளட் வரிசையில் அடுத்த மூன்றாம் பாகம் மிக பெரிய வன்முறையின் உச்சம் அதனை அடுத்ததாக பார்க்கலாம் தொடர்வோம்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *