வாழ்ந்து பார்த்த தருணம்…67

ஒரு மரணம் என்ன கற்றுக் கொடுக்கும்…

இன்றைக்கு இணையத்தில் வேறேதையோ பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு செய்தி கண்ணில் பட்டது மரணத்திற்கு பிறகு நம் உடலை இயற்கை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பதை மையப்படுத்திய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதன்பின் முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு கட்டுரையையும் படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரை மதுரையில் உள்ள ஒரு மின் மாயானத்தை பற்றியது. அதில் குறிப்பாக இப்பொழுதைய ஊரடங்கு சூழலில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாட்டை பற்றியும். அதிலும் குறிப்பாக நூறு சதவீதம் குறைந்துள்ள தற்கொலை மரணத்தை பற்றியும், ஐம்பது சதவீதம் குறைந்துள்ள விபத்து மரணங்கள் என நிறைய விஷயங்கள் அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தன. இவை அனைத்தும் தான் இந்த கட்டுரையை எழுத வேண்டும் என என்னைத் தூண்டியது. ஏற்கனவே ஒரு தொடர் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கிடையில் இது தேவையா என ஒரு பக்கம் தோன்றினாலும். சில கட்டுரைகளை எழுதத் தூண்டும் மனநிலை வாய்க்கும் போது எழுதிவிட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டுமொரு முறை அப்படியான மனநிலையும், அந்த கட்டுரைக்கே உரிதான வார்த்தைக் கோர்வைகளும் மனதினுள் இருந்து வந்து விழாது என்பதால் இந்தக் கட்டுரை.

சரி மேலே கட்டுரைத் தலைப்பில் உள்ள கேள்விக்கான பதில் எது எனக் கேட்டால், நீங்கள் அந்த மரணத்தை உன்னிப்பாக கவனிக்க தயாராக இருக்கும் பட்சத்தில், அது எல்லாவற்றையுமே உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் எனச் சொல்வேன். வெகு சமீபத்தில் மிக முக்கியமான ஒருவரின் மரணத்தை அருகில் இருந்து எதிர் கொள்ள கூடிய சூழல். எதிர்கொண்டேன். மரணித்தவர் யார் என்ன என்பதெல்லாம் இங்கே தேவையில்லை. காரணம் பொது வெளியில் என்னை பற்றிய மிக, மிகத் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதில்லை என்பது எனக்கு நானே விதித்துக்கொண்ட மிக முக்கியமான விதி. ஆதலால் அந்த மரணத்தின் வழியே நான் உள்வாங்கியது என்ன என்பதை மட்டும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அதனாலேயே இந்தப் பதிவு. இன்றைய சூழலில் இது தேவையா என்றால். கண்டிப்பாகத் தேவை. மற்ற எதையும் விட மரணத்தை புரிந்து கொள்வதில் ஒரு தீர்க்கமான தெளிவு இருக்கிறது. இங்கே அப்படியான சூழல் நம்மை நோக்கி வரும் போது பெரும்பாலான மனிதர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் அந்த சூழலிருந்து விலகி ஓடவே எத்தனிக்கிறார்கள். இதனை பலமுறை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அப்படியான சூழலை வாழ்க்கை ஒரு முறைக்கு இரு முறை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு போயிருக்கிறது. முதல் முறை அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ள நேர்கையில், அந்த சூழலின் தன்மையையும், அதன் உள்ளிருக்கும் வாழ்வின் அடிப்படை யதார்த்தையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறியதை நினைத்து, என்னை நானே பலமுறை கடிந்து கொண்டிருக்கிறேன்.

இங்கே பொதுவாக மரணத்தின் மீதான ஒரு வித பயம் ஆழ்மனதில் எதோ ஒரு வகையில் உழன்று கொண்டே இருக்கிறது என்பதை பல முறை அவதானித்திருக்கிறேன். ஒரு மரணத்தை அல்லது மரணித்தவரின் சடலத்தை எவ்வித பாசாங்கும் இல்லாமல் இயல்பாக எதிர்கொள்வது என்பது பெரும்பாலும் இங்கு நடப்பதே இல்லை என்பது தான் உண்மையாக முகத்தில் அறையும் நிஜம். நன்றாக கவனித்தால் மரணத்தை சாலையில் கொண்டாட்டமாக கொண்டு செல்லும் மனிதன் கூட எதையாவது ஒன்றை தனக்குள் செலுத்திக்கொண்டு, தன்னை வேறு ஒருவனாக ஆக்கிய பிறகே அந்த மரணத்தை கொண்டாடுகிறான். அல்லது கொண்டாடுவது போல் பாசாங்கு செய்கிறான். உண்மையில் மனிதனை இயல்பாய் மரணத்தை கொண்டாட சொன்னால் ஆடிப்போய்விடுவான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அதனாலேயே, இன்றைக்கு உருவாகியிருக்கும் இக்கட்டான சூழலில் நம்மை நோக்கி வரும் அந்த உயிரியல் நுண்ணியிரியை விட, அதன் வழி நமக்கு என்ன நேர்ந்துவிடும் என்கிற பயமே பெரும்பாலும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. நாம் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதும், கூட்டமாக விளையாடிக்கொண்டிருப்பதும், கூட்டமாக அலைந்து திரிந்து கொண்டிருப்பதும் கூட உள்ளுர உழலும் மரண பயத்தை வெற்றி கொள்வதாக நினைத்துக்கொண்டு, நமக்கு நாமே ஒரு வகையில் அதெல்லாம் நமக்கு ஒன்றும் ஆகாது என்கிற ஆறுதல் ஆட்டம் தானோ என்னவோ. உண்மையில் மரணம் என்கிற ஒரே ஒரு ஒற்றை வார்த்தையை கேட்டவுடன், நம்மூளைக்குள் கட்டமைக்கப்படும் பயத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை எட்டிப்பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை பல சமயங்களில் ஏனோ என்னால் அடக்க முடியவில்லை. அப்படி எட்டிப் பார்க்கையில் நம்முடைய வாழ்வில் அடுத்து வரும் காலங்களில் நாம் செய்தே ஆகவேண்டிய காரியங்கள், அடைந்தே தீர வேண்டிய ஆசைகள் என என்ற ஒரு பெரும் பட்டியலை ஆழ்மனதில் அசையாமல் இருக்கும் ஒரு கூலாங்கல்லை போல் வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருக்கிறோம். மரணத்தை பற்றிய பேச்சையோ அல்லது நெருக்காமனவர்களின் மரணத்தையோ எதிர்கொள்ள நேர்கையில் முதலில் மனக்கண்ணுக்குள் தோன்றி மறைவது என்னவோ அந்த நீளளளமான பட்டியல் தான்.

இதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவரின் மரணத்தை அருகில் இருந்து எதிர்கொள்ளும் சூழல் நேர்ந்தால் அதனை கூர்ந்து கவனித்து. ஏன், எதற்கு என்கிற கேள்வியை கேட்கிற புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பலமுறை எண்ணி இருக்கிறேன். கேட்டும் இருக்கிறேன். பதில் கிடைக்குமா என்றால் கிடைக்கும். அப்படியான சூழலை இயல்பாய் எதிர்கொள்ளும் போது, கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கும். அப்படியான மன அழுத்ததிற்கு பயந்து விலகும் போது தான் மரணம் பற்றிய பயம் உள்ளுக்குள் எங்கோ ஒளிந்திருந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருக்கும். அப்படியான மனநிலையை வைத்துக்கொண்டு யதார்த்தமாய் போய்கொண்டிருக்கும் வாழ்வின் இடையே எதிரில் ஒரு சடலத்தை பார்க்க நேர்ந்தாலே, அதனை இயல்பாய் கடந்து போக முடியாமல் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று அந்த கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் பயத்தை கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்படியான பயத்தின் செல்லுத்துதலால் தான் மனிதன் நின்று நிதானமாக எதனையும் உள்வாங்காமல், திரும்பியே பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதனால் மரணத்தை அருகில் இருந்து எதிர்கொள்ளும் சூழல் நேர்ந்தால் அந்தச் சூழலின் அழுத்தத்தை கடந்து வருவதை வெற்றிகரமாக செய்துவிட்டால். நிறைய விஷயங்களுக்கான விடை கிடைக்கும். அதே சமயம் மிகப்பெரும் ஆழ்மன அமைதி தோன்றுவதையும் இனம் காண முடியும். அது ஒரு உன்மத்த நிலை. சமீபத்தில் எதிர்கொண்ட அப்படியான சூழலில், அந்த மரணத்தை உணர்ச்சிவசமாய் அணுகாமல் இயல்பாய், எதார்த்தமாய் அணுகும் மனநிலைக்கு போகையில், இறுதி நிமிடத்தில் கூட நெருக்கமான ஒருவரின் குரலை கூட அவதானிக்க முடியாமல் போன போது, என்னுடைய குரல் அங்கே அவரால் அடையாளம் காணப்பட்டதும். நான் சொல்வதையும் அவரால் கேட்க முடிந்ததும் எனக்குள் மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்தியது. நம் கண்முன் வாழ்க்கையின் இறுதி நொடியில் நகரும் ஓரு உயிரின் மீதான கவனம் பயமாய் இல்லாமல், இயல்புடன் கூடிய உண்மையான அக்கறையாக இருக்குமானால், அது நமக்கு ஆயிரம் விஷயங்களை கற்றுக்கொடுக்கும். ஆனால் நாம் உணர்ச்சிபூர்வமாய் இல்லாமல், இயல்பாய் அந்த மரணத்தை எதிர்கொள்ள தயாராய் இருக்கவேண்டும் என்பது தான் நம்முன் இருக்கும் சவால். மகிழ்ச்சி.

கடைசியாக

பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தான் ஒரு பறவை கூட்டமொன்று தொலைதூர வானத்தில் பறந்து செல்வது தெரியும். இல்லாவிட்டால் சாதாரணமாக இந்த புகைப்படத்தை கடந்து சென்றுவிடலாம். நம்முன் நிகழும் பல மரணங்களும் அப்படியானது தான். அதனை சாதாரணமாக கடந்து செல்லாமல் கூர்ந்து கவனித்தால் தூரத்தில் பறக்கும் பறவையை போல பல விஷயங்கள் நமக்குள் உணரப்படலாம். ஆனால் அது உங்களின் கவனித்தலை பொறுத்தது. நன்றி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *