வாழ்ந்து பார்த்த தருணம்…74

மனிதன் எனும் ஆகச்சிறந்த ஈனப்பயல்…

ஜெ.மோகனின் அறம் புத்தகத்தில் ஒரு முக்கியமான இடத்தில் யானை மருத்துவர் கே மனிதனை ஈனப்பயல் எனச் சொல்வார். எந்தச் சூழ்நிலையில், எப்படிப்பட்ட மனநிலையில் அந்த வார்த்தையை சொல்கிறார் என்பதை கவனித்தால், அந்த சொல்லின் பின்னால் இருக்கும் உண்மைத்தன்மையின் வீரியம் மிக, மிக ஆழமாய் வாசிப்பவனைச் சுடும். அப்படி அதிகமாக சிந்திக்க வைத்த வார்த்தை அது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை கவனித்தால், அவர் சொன்ன அந்த வார்த்தை நூறுக்கு நூறு சரியென்பதை இந்த மனிதன் மிகச் சிறப்பாய் நிறுவிக் கொண்டே இருக்கிறான். இந்த ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து, தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதை பெரும்பான்மை நேரங்களில் தவிர்த்தே வந்திருக்கிறேன். முதலில் ஒன்றினை சொல்லிவிடுகிறேன். வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது. அதனைத் தலையைச் சுற்றி பரண் மீது தூக்கி போட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஏன் என்பது தனிக்கதை. அது இப்பொழுது தேவையில்லை, இப்படியான நிலையில் தான் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து, காலை பத்து மணிக்கு என்னுடைய அலைப்பேசி வழியே இணையத்தில் அன்றைய பத்து மணி செய்திகளில் ஒரு செய்தி தொலைக்காட்சி ஊடகத்தின் தலைப்பு செய்தியை மட்டும் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கிக் கேட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவேன். அதுவும் தினசரி தலைப்பு செய்தியைப் பார்ப்பது கிடையாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ மட்டும் தான், தலைப்பு செய்தியை கவனித்தாலே விரிவான செய்திகளில் இவன் என்ன சொல்லப் போகிறான் என்பது தெளிவாய் தெரிந்து விடும். அதுவும் செய்தி வாசிப்பவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை சொல்லாடல்கள் இருக்கிறது இல்லையா, அதைத் தொடர்ச்சியாய் நடுவீட்டில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் யாரும் இந்த ஜென்மத்தில் உருப்பட முடியாது என்பது உறுதி.

இப்படிப்பட்ட நிலையில் மே ஏழாம் தேதிக்கு இவர்கள் கொடுத்த அதீத விளம்பரங்களையும், அலப்பறைகளையும் கவனித்தால் முடியலயடா சாமி என்கிற நிலைதான் இருந்தது. ஒரு முன்னனியில் இருக்கும் உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகையில் கொடுக்கப்படும் அத்தனை விதமான முன்னேடுப்புகளுக்கும் சற்றும் குறைவில்லாத அளவு புள்ளி விவரங்களோடு இவர்கள் கொடுத்த செய்திகள் ஒவ்வொன்றும் தனி ரகம். அதனைப் பார்த்து, தெரிந்து, குறிப்பெடுத்து அப்படியே கல்வெட்டுகளில் பொரித்து வைத்து, அதன் அருகிலேயே உட்கார்ந்து நம்முடைய வருங்கால சந்ததிக்கு கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியவைகள் என்பதை, இந்த உலகம் கண்டிப்பாய் ஏற்றுக் கொள்ளும். இப்படிப்பட்ட மிக, மிக முக்கிய சரக்கு செய்திகளின் புள்ளிவிவரங்களில் புல்லரித்து கிடைக்கையில் தான். கடந்து நான்கு நாட்களில் மிக, மிக முக்கியமான, ஆனால் இந்த மக்களுக்கு தேவையே இல்லாத மூன்று முக்கியமான செய்திகள் வெறும் தகவல் செய்திகளாக மட்டும் நம்மை கடந்து போயிருக்கின்றன. முதல் செய்தி விசாகப்படினம் விஷவாயு கசிவு. இரண்டாவது நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து. கடைசியாக சரக்கு ஏற்றிச் செல்லும் தொடர்வண்டியின் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போன பதினாறு பேரின் உயிர். இந்த மூன்று செய்திகளின் தொடர்ச்சியை கண்டிப்பாக நமக்கு இந்த செய்தி நிறுவனங்கள் சொல்லப் போவதே இல்லை. நாமும் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்கிற மனநிலையில் தான் இருக்கிறோம். வாழ்த்துகள். இதில் மூன்றாம் செய்தியில் கூட கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம் என கொஞ்சத்துக்கு கொஞ்சமேனும் தனிமனிதன் மீது குற்றம் சொல்லிவிட முடியும். ஆனால் முதல் இரண்டு செய்திகளில் இருப்பது முழுக்க, முழுக்க ஒரு பெரும் நிறுவனத்தின் அலட்சியம். அதிலும் விசாகப்படினம் LG என்கிற கொரிய நிறுவன தொழிற்சாலையின் விஷய வாயுக் கசிவில் பதிமூன்று பேர் இறந்திருக்கிறார்கள். அதில் ஒரு குழந்தையும் அடக்கம். முதல் செய்தியை மட்டுமே கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் மனம் பதறுகிறது. அந்தச் செய்திகளின் காணொளிகளை கண் கொண்டு பார்க்கமுடியவில்லை. இவ்வளவு நடந்தும் அன்று இரவே இன்னொரு முறை விஷவாயு கசிவு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு சின்ன செய்தியாக கடந்து போய் விட்டது. கிட்டத்தட்ட ஐயாயிரம் பேருக்கும் மேல் பாதிப்படைந்ததாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விஷவாயு கசிவின் பாதிப்பு, அதனை சுவாசித்த மனிதனின் உடலில் எந்த அளவு பரவியிருக்கிறது என்பதைப் பொறுத்து, அவன் சாகும் வரை அதன் பாதிப்பு இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் அதனைப் பற்றிய ஒரு விவாதமோ, சின்ன அதிர்வோ கூட இல்லாமல், நாம் எவ்வளவு குடித்திருக்கிறோம் என்பதை ஊராட்சி, மாவட்ட, மாநில வாரியாக கணக்கெடுத்து, அதனை மிக, மிக சிறப்பான முறையில் விவாதித்து கொண்டிருக்கிறோம். அருமை. விஷய வாயு கசிவின் தொடர்ச்சியான செய்திகள் ஏதாவது இருக்கிறதா என தேடினால் அது தலைப்பு செய்திகளில் கூட சொல்லப்படவில்லை. முதலில் வந்த செய்திகளிலேயே மிக முக்கியமான பல புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதுவே குலை நடுங்க வைப்பவையாக இருந்தது. முதல் விஷயம் விஷவாயு கசிவு ஏற்ப்பட்ட அந்த கலனில் இருப்பது மொத்தம் ஐந்தாயிரம் டன் வாயு. பரவிய வாயு கிட்டதட்ட ஐந்து கீலோமீட்டர் அளவுக்கு பரவியிருக்கிறது. பதிமூன்று பேர் உடனடியாக இறந்திருக்கிறார்கள். ஒரு குழந்தை உட்பட. ஐந்து கிலோமீட்டருக்குள் இருக்கும் மக்களை அவசர, அவசரமாக வெளியேற்றி இருக்கிறார்கள். அது எப்படி என்பதை பற்றி செய்திகள் இல்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்தும் இன்னும் நிலைமை எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை. கசிவு ஏற்பட்ட பொழுது அந்த LG என்கிற கொரிய நிறுவன ஆலைக்குள் வேலையாட்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நிலைமையும் என்னவென தெரியவில்லை. இவையனைத்தையும் பற்றிய தொடச்சியான செய்திகள் வரவே வராது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் கொடுப்பதாக வந்த அறிவிப்பு மட்டுமே நமக்குத் தெரியும். நமக்கும் அது தான் ஒரு கோடி கொடுக்குறான்ல என்ற குரூர திருப்தி தோன்ற, மது காதலர்களின் புள்ளி விவரங்களை தேடி ஓடிவிடுவோம். அவர்களும் அடுத்த உயிர்கொல்லி ஆலையை பெரும்பான்மை மக்கள் வசிக்கும் பகுதியின் நடுநாயகமாக வந்து நிறுவி, இந்த ஆலையினால் ஏற்படப் போகும் வேலை வாய்ப்பினால் மக்களின் பொருளாதார நிலையில் எப்படிப்பட்ட மாற்றம் ஏற்படும் எனும் புள்ளிவிவரங்களை சொல்லி புல்லரிக்க வைத்துவிடுவார்கள். இந்த லட்சணத்தில், இந்த இணைய ஊடக புலி(ளி)கள் வேறு இந்த விபத்தை பற்றி ஒரு திரைப்பட இயக்குநரை கூப்பிட்டு விவாதித்து அதனை இணையத்தில் காணொளியாய் பதிவேற்றி இருக்கிறார்கள். அவர் யாரென்று பார்த்தால் இந்த தொழிற்சாலை வாயு கசிவை பற்றி ஒரு திரைப்படம் எடுத்திருக்கிறார் அவ்வளவே. விஷவாயுக் கசிவு, மக்கள் பாதிப்பு என்பதைத் தாண்டி, அந்த இயக்குநருக்கு, அது என்ன மாதிரியான வாயு, அதன் தன்மை என்ன, அதன் கசிவினால் ஏற்படும் பாதிப்பின் வீரியம் ஏத்தகையது என பல அடிப்படையான கேள்விகளுக்கே பதில் தெரியாது. இப்படிப்பட்ட ஆதீத புத்திசாலிகள் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற தட்டையான பதிலை திரும்ப, திரும்பச் சொல்லிவிட்டு திருப்தியாகி விடுவார்கள். நாமும் இந்தத் துறையினைப் பற்றிய முழு விவரமறிந்த ஒருவரிடம் கூட முழுதாய் ஒரு தெளிவான பதிலை கேட்டுப் பெற முடியாது. சரிவிடுங்க்கப்பா மதுகடையை திறப்பதற்கு மேல் முறையீட்டுக்கு போயிருக்காங்களா இல்லையா அத சொல்லுங்க முதல்ல, மத்த விஷயத்த அப்புறமா பேசிக்கலாம். அதச் சொல்லாம நீங்க வேற வள வளன்னு பேசிகிட்டு. ஈனப்பயலாகவே இருப்பதில் பெருமைகொள்கிறேன். இன்னும், இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது போதும். மகிழ்ச்சி.

கடைசியாக : இனி தொடர்ச்சியாய் எழுதவேண்டுமேன நினைத்து, மூன்று நாட்கள் தொடர்ச்சியாய் எழுதி பதிவேற்றி கொண்டிருந்தேன். ஆனால் மூன்றாம் நாள் செய்திகளில் கேட்ட விஷவாயுவை சாதாரணமாக கடந்து செல்ல இயலவில்லை. பார்க்கலாம்.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *