வாழ்ந்து பார்த்த தருணம்…76

ஆழுகிப் போக ஆரம்பித்திருக்கும் ஆடம்பர அளப்பரைகள்…

இன்றைய இளைய தலைமுறையில் எத்தனை சதவீதம் பேருக்கு உழவு, பயிரிடல், நீர்நிலைகள், மண்ணின் தன்மை, தானிய விதைகள், கலப்பை இன்ன பிற பல இத்தியாதிகள் தெரியுமென தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாக தெரியும். அது முழுவதுமாக குளிருடப்பட்ட வணிகவளாகம், அந்த மாலுக்கு போன வாரம் போனோம், புல் ஏசி தெரியும்ல செமய்யா இருந்துச்சு என்ற பேச்சுக்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் சர்வசாதாரணம். இப்படியான நிலையில் தான் இன்றைக்கு ஒரு தொலைக்காட்சி செய்தி ஊடகத்தின் செய்தி ஒன்றினை இணையத்தில் பார்க்க முடிந்தது. அந்தச் செய்தி சொன்ன செய்தி தான் இங்கு எல்லோரும் அறிய வேண்டிய மிக, மிக முக்கியமான விஷயம். கிட்டதட்ட ஐம்பது நாட்களை நெருங்கிவிட்ட இந்த ஊரடங்கில், வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்படாமலே இருக்கின்றன. இப்படியான நிலையில் சில இடங்களில் கொடுக்கப்பட ஊரடங்கு தளர்வு காரணமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை திறந்து பார்த்தவர்களுக்கு. ஒரு பெரிய அதிர்ச்சி. இத்தனை நாட்களாய் முழுவதும் குளிர்சாதனப்படுத்தப்பட்ட கடைக்களுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைவிதமான, உயரக தோல் பொருட்கள், மற்றும் காலணிகள் போன்ற பலதரப்பட்ட பொருட்கள் அனைத்தின் மீதும் பூஞ்சை படிந்து முற்றிலுமாக பயன்படுத்த லாயக்கில்லாமல். குப்பையில் தூக்கி போடும் நிலையில் பெரும்பாலான பொருட்கள் இருந்திருக்கின்றன. விலையின் அடிப்படையில் பார்த்தால் இவை அனைத்தும் அதிகப்பட்ச விலை கொண்ட உயர்ரக பொருட்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் மிக முக்கிய வணிக வளாகத்திலும் இதே கதி தான். அந்தச் செய்தியின் காணொளியில் அப்படி பூஞ்சை பிடித்து போன பல உயர்ரகப் பொருட்களை, நவநாகரிக நங்கையர் இருவர் ஒவ்வொரு பொருளாய் குறிப்பெடுத்துக் கொண்டு குப்பைக்குள் போடுவதை காண்பித்தார்கள். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என ஒரு பாடல் வரி இருக்கிறது இல்லையா?. அந்த வரிகளை அப்படியே மாற்றி எழுதிக்காட்டி இருக்கிறது ஒரு சின்ன தம்மாந்துண்டு நுண்ணியிரி. அந்தக் காட்சியை பார்க்கையில் மனதுக்குள் அந்த நுண்ணியிரியை பார்த்து நீ கலக்கு சித்தப்பு எனச் சொல்ல தோன்றியது.

உலகமயமாக்கல் என்ற பதம் ஒவ்வொரு வளரும் நாடுகளுக்குள்ளும் நுழைகையில், அந்த நாட்டில் இருக்கும் மிக, மிக முக்கியமான தொழில் நகரங்களின் மீது தான் அது தனது ஆழமான கால்களை ஊன்ற ஆரம்பிக்கும். அதன் முதல் புள்ளி தான் வணிக வளாகங்கள். அதன் பின்னர் தான் அந்நிய நேரடி வணிக முதலீடு. தொழிற்சாலை மற்றது எல்லாம். இந்த நிலையில் நாம் காலம் காலமாய் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்து பின்பற்றி வரும் அனைத்துவிதமான பழக்க வழக்கங்களையும் அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் ஆக்குவது தான் இந்த வணிக வளாகங்களின் முதல் வேலையே. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் நம்முடைய உணவு முறையை முற்றிலும் சிதைப்பது தான் முக்கிய நோக்கமே. இன்று வணிக வளாகம் சென்று வரும் எத்தனை பேர் அங்கு வினியோகிக்கப்படும் உணவுகளை பற்றிய பிரங்ஞையோடு இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதை படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது, இந்த உணவுகளை பற்றி உனக்கு என்னத் தெரியும் அதை பற்றி சொல்ல நீ யார் என்ற கேள்வி மனதினுள் தோன்றினால், அவர்களுக்கு ஒரு விஷயத்தை விளக்கி விடுகிறேன். கிட்டத்தட்ட பத்திலிருந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக இந்த உணவுத் துறைக்குள் பல்வேறு படிநிலைகளில் பணி செய்தவன். உணவகம், அடுமனை, இனிப்பு, காரம் என இந்த உணவு துறை சார்ந்த பலதரப்பட்ட இடங்களில் முக்கியமான பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு வாடிக்கையாளர் நுகரும் உணவுப் பொருள் எப்படியான நிலைகளில் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் உணவுத் தட்டை வந்தடைகிறது என்கிற அந்த பாதையை பற்றிய அடிப்படையான அறிவை என்னுடைய பல வருட அனுபவத்தின் அடிப்படையில் அறிந்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அந்தப் புள்ளியில் இருந்து தான் இதனை எழுதுகிறேன். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் எளிதில் எல்லோருக்கும் விளங்கும். இன்றைக்கு கிட்டத்தட்ட அனைத்து வணிக வளாகங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் முக்கியமான உணவுப் பொருள் சோளம். சோளம் உடம்புக்கு நல்லது என்கிற ஒரு தட்டையான புரிதல் இன்றைக்கு எல்லோர் மனதினுள்ளும் பதிந்து போன ஒன்று. சரி அப்படியான உடம்புக்கு நல்லதையே செய்யும். அதுவும் இந்த வணிகவளாகங்களுக்குள் விற்கப்படும் சோளம் எப்படி பயிரடப்படுகிறது என்கிற அளவுக்கு கூட போகத் தேவையில்லை. அந்த வளாகத்துக்குள் எப்படி அதனை தயாரித்து கொடுக்கிறார்கள் என தெரிந்தாலே தலை சுற்றிவிடும்.

வணிகவளாகத்துக்குள் இருக்கும் சோளம் விற்பனை செய்யும் கடைகளில், அந்த சோளத்தை அவித்து ஆவி பறக்க, பறக்க காட்சிப் படுத்தி வைத்திருப்பார்கள். அந்த ஆவி பறக்கும் சோளத்தை அதற்கு முன்னர் எப்படியான நிலையில் வைத்திருப்பார்கள் என யாருக்காவது தெரியுமா?. தெரியவே தெரியாது. ஒவ்வொரு நாளும் விற்றது போக மிச்சமிருக்கும் சோளத்தை அப்படியே நெகிழிப்பைகளில் அள்ளி, அதாவது பிளாஸ்டிக் பைகளில் அல்லது அப்படியான டப்பாக்களில் அள்ளி. ஐஸ்கிரிம் வைக்கப் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியில் நூறு டிகிரி உறை நிலையில் பாதுகாத்து வைப்பார்கள். அடுத்த நாள், அந்த உறை நிலையில் இருந்து எடுத்து அப்படியே அந்த உறை நிலையில் கல் போல் இருக்கும் சோளத்தை சூடாக இருக்கும் வேகவைக்கும் பாத்திரத்தில் அப்படியே கொட்டுவார்கள். நூறு டிகிரி உறை நிலையில் இருந்து அப்படியே அது மிக சூடான எதிர்நிலைக்கு மாறும். நூறு டிகிரி குளிரில் கல்லாக இருக்கும் சோளம் அப்படியே சூடான எதிர் நிலைக்கு மாறுகையில் அதன் சுவையில் எவ்விதமான மாறுபாடும் தோன்றாத அளவுக்கான இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கு வாண்டா என்று சொல்லும் அளவுக்கு சகல ராசயானங்களும் கலக்கப்பட்டு தான் பயிரடப்பட்டே வந்திருக்கும். அதுவும் போக உறை நிலையில் இருக்கும் சோளத்தை கொஞ்சமாவது இயல்புக்கு நிலைக்கு கொண்டு வந்து வேக வைக்கும் அளவுக்கான நேரமெல்லாம் நமக்கு பத்தாது கண்ணு என்பது தான் இன்றைக்கு அதிவேகமாக பயணித்து கொண்டிருக்கும் உலகத்தின் அடிப்படையான உணவு தயாரிப்பின் இலக்கணம். சோளம் உடம்புக்கு நல்லது தெரியுமோ என்கிற நம்முடைய மகா அட்டகாசமான புரிதலோடு, நாமும் அதனை வாங்கி மென்ற படியே நடந்து கொண்டே, நம் மனதுக்குள் இப்படியான வணிக வளாகத்துக்குள் வந்து நுகர வேண்டும் என்கிற மிக உயரிய லட்சிய கனவு நிறைவேறி விட்டதை நினைத்து புல்லரிப்போம். சோளம் என்பது ஒரே ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. இப்படி ஓவ்வொன்றாக சொல்லி கொண்டே போனால் நாடு தாங்காது. அப்புறம் மற்றொரு முக்கியமான விஷயமும் அந்த செய்தி ஊடகத்தின் காணொளியில் உண்டு. பலதரப்பட்ட உயரக பொருட்களின் மீதே இந்த ஊரடங்கு காலத்தில் இவ்வளவு பூஞ்சைகள் பிடித்திருக்கும் போது, அந்த வளாகத்தினுள் இயங்கும் குளிர்சாதனத்தை வெளியிடும் குழாய்களுக்குள் எவ்வளவு பூஞ்சைகள் படர்ந்திருக்கும். அப்படியானால் ஊரடங்கு முடிந்து வணிக வளாகங்கள் திறக்கப்படுகையில் கண்டிப்பாக அந்த குழாய்கள் முழுவதையும் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும். அதனை செய்வார்களா என கேட்டால், நம்முடைய ஆரோக்கியத்தின் மீது எந்த அளவு அக்கரை இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள சோளம் போன்ற உன்னத உணவுகளை நம் மீதான கரிசனத்தில் மிக குறைவான விலையில் நுகர கொடுப்பார்கள். அதனால் அவர்கள் வளாகத்தை முழுவதும் சுத்தப்படுத்திவிட்டு தான் திறப்பார்கள் என எனது கட்சிக்காரர் வண்டுமுருகன் சார்பாக உறுதியளிக்கிறேன். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *