வாழ்ந்து பார்த்த தருணம்…80

நினைவு அடுக்களில் உறைந்திட்டக் கற்சிலை…

சிறு வயது காலங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. ஆனாலும் பொதுவான சில சம்பவங்கள் மட்டும் பெரும்பாலானவர்களின் நினைவடுக்குகளுடன் ஒத்துப் போவதை பார்த்திருக்கிறேன். சிறாராய் இருக்கும் காலம் தாண்டி வீட்டிலிருந்து படிப்புக்காய் வெளிவரும் காலத்திலிருந்து தான் கிட்டதட்ட ஒரு மனிதனுக்கு முதன் முதலாக வெளியுலக அனுபவம் என்பது தொடங்குகிறது. இங்கே மனிதன் என பொதுவாய் குறிப்பட காரணம் ஆண், பெண் இருவருக்கும் சேர்த்தே என்பதால் தான். அப்படியான நாட்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களை பற்றி அவர்களுக்குக்கே ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிக்கும். அப்படியான பிம்பம் என்பது பெரும்பாலும் அவர்கள் போட்டிருக்கும் உடையில் இருந்து, பயன்படுத்தும் பொருட்கள், உடலின் நிறம் என பல்வேறு ஒப்பீடுகளை மற்றவர்களை பார்த்து அவதானித்து எற்படுத்திக் கொள்வது. அப்படி உருவாக்கப்படும் பிம்பம் பெரும்பாலும் தன்னை விட மற்றவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதாக அதிகம் இருப்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அதற்குள் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தான் ஒன்றும் சிறப்பானவன் இல்லை என்கிற பிம்பமே, எல்லோரோடும் இயல்பாய் பழக விடாது. அதே பிம்பம் பல சமயங்களில் மற்றவர்களை ஆச்சர்யமாய் பார்க்க வைக்கும். இது மாதிரியாக போய் கொண்டிருக்கும் வாழ்வில் சில நபர்களின் வருகையும், அவர்களின் செயல்பாடும் நம்மை பல மடங்கு ஆச்சர்யப்பட வைக்கும். நம்மிடம் எப்படியான சிறப்பான விஷயங்கள் இல்லை என பெரிய பட்டியலே வைத்திருக்கிறோமா. அப்படிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் ஒருங்கே இணைத்து உருவான ஒரு நபராக அவர்கள் நம் முன் உலா வருவது எப்படியென பல முறை அந்த வயதில் மண்டை காய யோசித்திருக்கிறேன். ஆனால் அப்பொழுதைய காலக் கட்டத்தில் விடை கிடைக்கவேயில்லை. இப்பொழுது யோசித்தால் அது ஒரு ஒன்றுமேயில்லாத விஷயம், ஒரு சின்ன புரிதலுடன் கூடிய எண்ண மாறுபாட்டின் வழியாகவே அப்படியான நிலைக்கு நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியும் என அந்த வயதில் உணரவே இல்லை. ஆனால் இப்பொழுது புரிகிறது. ஆனாலும் அந்த முரண் தான் இன்று நினைவடுக்குகளில் இனிப்பானதாய் இருந்து கொண்டிருக்கிறது.

சிறாராய் இருந்து வெளிய வந்து உலவ ஆரம்பிக்கையில், இந்த உலகத்தை, சுற்றியிருக்கும் சமூகத்தை எனப் பார்த்து ஆச்சர்யப்பட ஆயிரம் விஷயங்கள் உண்டு. அதையெல்லாம் தாண்டி நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் ஆண் மீதும், நீங்கள் ஆணாக இருந்தால் ஒரு பெண் மீதும் தோன்றும் முதல் ஆச்சர்யம் தான் எதிரெதிர் பாலினத்தை ஒரு மனிதன் புரிந்துகொள்ளும் முதல் புள்ளி. அந்த புள்ளியில் இருந்து நீங்கள் எதிர்பாலினத்தை பற்றி உள்வாங்கும் ஒவ்வொரு விஷயமும் தான் பின்னாளில் அவர்களை பற்றிய ஒரு பிம்பத்தை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ உங்களிம் ஆழ் மனதில் உருவாக்குகிறது. இப்படியான நிலையில் இருந்து பல்வேறு ஒப்பிடுகளின் அடிப்படையில் என்னை பற்றிய என்னுடைய பிம்பம் மெச்சத்தக்கதாக இல்லாத ஒருவனாக சுற்றிக் கொண்டிருந்தேன், அப்படியல்லாமல் தன்னை பற்றிய மிகப் பெரும் நம்பிக்கையோடு சுற்றி கொண்டிருக்கும் யாரை பார்த்தாலும் அவர்கள் மீது இயல்பாகவே என்னுடைய கவனம் நிலைத்தப்படி இருக்கும். இந்தச் சூழலில். அந்த வயதில் எதிர்பாலின ஈர்ப்பு என்பது வெகு இயல்பு. அந்த ஈர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு முட்டாள் தனமாய் எதுவும் யோசிக்காமல் இருந்தாலே போதும் என்கிற தெளிவு ஒன்று மட்டும் அந்த வயதில் இருந்தது. அப்படியான நிலையில் தன்னை பற்றிய மிகச் சிறப்பான மதிப்பீடு கொண்ட ஒரு பெண்ணை பார்த்தால் எப்படியிருக்கும். அதுவும் தன்னை பற்றிய முழுமையான நம்பிக்கையான பிம்பத்தோடு அதுவும் தன்னுடைய நிறை, குறைகளை பற்றிய தெளிவோடு இருந்த ஒரு பெண்ணை பார்க்கையில் அவர் மீது ஈர்ப்பும், மரியாதையும் ஒருங்கே ஏற்பட ஆச்சர்யமாய் அவரை பார்த்துக் கொண்டிருப்பேன். இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தன்னை பற்றிய நிறை, குறைகளை ஒரளவு அறிந்து தெளிந்த ஆண், பெண் என அது யாராக இருந்தாலும் அந்த தெளிவின் வழியே அதீதமான நம்பிக்கை மண்டைக்கு ஏறி யாரையுமே துச்சமாக மதிக்கும் மனப்பான்மையில் சுற்றிக்கொண்டிருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அது மாதிரி இல்லாமல் தன்னைப் பற்றி சரியான சுயமதீப்பிட்டோடு மற்றவர்களிடமும் தன்மையாய் நடந்து கொள்ளும் மிகப் பெரும் நம்பிக்கை தேவதை தான் அந்தப் பெண். அந்தப் பெண் தன்னை அழகாய் வெளிக்காட்டுவதில் இருந்து, தன்னுடைய உடையை வெகு நேர்த்தியாய் தேர்ந்தெடுத்து உடுத்துவது, பேச்சில் தெறிக்கும் நம்பிக்கை, பொதுவான இடத்தில் தன்னை முன்னிறுத்தும் விதம், கற்றலிலும் கூட தன்னால் எந்த அளவு முடியுமோ அதனுடன் ஒத்துபோய் மற்றவர்களிடம் புலம்பாமல் இருப்பது என பல ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்துவைத்திருந்த தேவதை. இன்றைக்கு நினைத்தாலும் அவரின் அந்த பேச்சிலும், தேர்ந்தெடுக்கும் வார்த்தையிலும், உடல்மொழியிலும் தெறிக்கும் ஒரு அலட்சியம் கலந்த நம்பிக்கை அப்படியே என் நினைவடுக்குகளில் உறைந்திருக்கிறது.

இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன் என் வாழ்வின் மிக முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கப் போயிருந்தேன். போவதற்கு முன்பாக அவரிடம் எத்தனை மணிக்கு சந்திப்பு என்பதையெல்லாம் முன்னரே சொல்லிவிட்டு, சரியான நேரத்தில் அவரை பார்க்க போய்விட்டேன். இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சிறு வயது வாழ்வியல் சூழல் பற்றிப் பேச்சு திரும்பியது. அந்த நேரத்தில் தான் ஒரு ஆச்சர்யமான சம்பவம் நடந்தது. அவருடனான பேச்சுக்கு இடையில் மேலே சொன்ன பெண்ணின் பெயரை குறிப்பிட்டு உனக்கு ஞாபகம் இருக்கா எனக் கேட்டார். சடாரென ஒரு நிமிடம் சின்ன அதிர்வை உணர்ந்தவனாய் உளரலாக ஞாபகம் இருக்கு எனச் சொன்னேன். உடனே அவர் அந்த பெண் இருக்குமிடம் எனக்குத் தெரியும் பார்த்துவிட்டு வரலாமா எனக் கேட்டார். நாவில் பேச்சு எழவில்லை. தலையை மட்டும் ஆட்டினேன். அப்படியே ஆண்டவனிடன் மனம் வேண்ட ஆரம்பித்தது. தன்னை பற்றிய மிகப் பெரும் தெளிவோடு வலம் வந்த அந்த பெண்ணாகவே அவர் இன்றும் இருக்க வேண்டுமென மனம் இறைஞ்சி வேண்டியது. அவருடன் அந்தப் பெண்ணை காண போய்விட்டேன். சிறிது நேரம் காத்திருந்தோம். இப்படியே கிளம்பி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆனாலும் படபடத்துகொண்டிருந்த மனதினை கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தேன். தூரத்தில் அவர் வருவதை என்னுடன் இருந்த நபர் உறுதி செய்தார். எனக்குள் இருந்த அந்த ஒளிவீசும் தேவதையை சமகாலத்தோடு ஒப்பிட்டு கொண்டே இருந்தேன். பெரும்பாலும் தோல்வியே மிஞ்சியது. அவர் அருகில் வந்ததும் ஒரு திரைப்பட உரையாடல் மனத்துக்குள் ஓடியது குருதிப்புனல் திரைப்படத்தில் கே.விஸ்வநாத் தவறிழைத்தவராக மாட்டிக் கொண்டவுடன், கமல் அவர் வீட்டில் அவர் அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது கமல் விஸ்வநாத்திடம் கடைசியா ஒரு தடவை உங்களோட முகத்துல நேர்மை எங்க இருக்குன்னு பார்க்க வந்தேன் என்பார். அதற்கு விஸ்வநாத் இந்த முகத்துல அப்படி எதுவும் இல்லை என்பார். அந்த திரைப்படத்தின் உரையாடலை இப்பொழுதைய நிலையோடு பொருத்திப் பார்க்கத் தோன்றியது. ஆனாலும் கமலால் விஸ்வநாத்தின் முகத்தில் கண்டடைய முடியாத நேர்மையை, என்னால் அந்த பெண்ணின் முகத்தில் மிஞ்மிருந்த நம்பிக்கையில் கண்டடைய முடிந்தது. தேவதையின் மிச்சத்தை தன் முகத்தில் கொஞ்சமேனும் தேக்கி வைத்திருந்த அவரை பார்த்துவிட்டு வருகையில், கொஞ்சம், கொஞ்சமாய் காலம் தின்று தீர்த்த அந்த தேவதையின் அலட்சியமான நம்பிக்கையின் ஒளிக்கிற்றை நினைத்து மனத்துக்குள் ஏனோ ஒரு வித வலி கீறிச் செல்ல, கண்களில் ஓரத்தில் விழுந்த நீரின் திவலைகளை காற்றில் அலையவிட்ட படி நிகழ்காலத்தின் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன். மகிழ்ச்சி.

கடைசியாக : என்னுடைய எழுத்துக்கள் எக்காரணத்தை கொண்டும் ஒரு சின்னதான எதிர்மறை சலனத்தை கூட வேறு ஒருவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது என்கிற அடிப்படை அறம் காரணமாக, பலவற்றை முழுமைப்படுத்தவில்லை. நன்றி. என்னுடைய நினைவடுக்குகளின் உள்ளே நுட்பமான இடைவெளிகளில் ஒளிந்திருக்கும், ஈரமான பக்கங்களின் சில துளிகளை எழுதி என்னுடைய பிறந்ததினத்தன்று அன்று பதிவேற்ற வேண்டுமென தோன்றியது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *