வாழ்ந்து பார்த்த தருணம்…82

Hygiene எனும் அட்டுழியமான, தாங்க முடியாத அளப்பரைகள்…

சில நாட்களுக்கு முன்னதாக என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த என்னுடைய பேச்சின் காணொளியில், ஒரு விஷயம் குறிப்பிட்டிருந்தேன். அது இப்பொழுது குடியிருக்கும் வீட்டின் அருகில் வாரம் ஒரு முறை கூடும் காய்கறிச் சந்தையில் தான் காய்கறிவாங்க போவேன் எனச் சொல்லியிருந்தேன். இந்த காணொலியினை பார்த்த நண்பர் ஒருவர் ஏன் ஜீ அங்க காய்கறி எல்லாம் ஹைஜீனிக்கா இருக்குமா என ஒரு மிகவும் முக்கியமான, அத்தியாவிசயமான, மிகவும் உபயோகமுள்ள் கேள்வி ஒன்றினைக் கேட்டார். பதிலுக்கு நீங்கள் குறிப்பிடுகிற அந்த ஹைஜீனிக் என்றால் என்ன என விளக்கி சொல்ல முடியுமா என திரும்பக் கேட்டால் அவரால் பதில் அளிக்க முடியவில்லை. திணற ஆரம்பித்துவிட்டார். அவர் மட்டுமில்லை இங்கே பெரும்பாலானவர்களின் மனதிற்குள்ளும் இந்த ஹைஜீனிக் எனும் வார்த்தை படுத்தும் பாடு இருக்கிறதே. அதனைத் தமிழில் சுத்தம் என குறிப்பிடாமல் ஆங்கல உச்சரிப்பிலேயே குறிப்பிடக் காரணம் சுத்தம் என்கிற வார்த்தையை விட ஹைஜீனிக் என்றால் புல்லரிப்பு அதிகமான பேருக்கு உருவாகும் என்பதால் தான். புல்லரித்தவுடன் சொரிந்த கொள்ள சுகமாக இருக்குமில்லையா அதனால் தான். உண்மையில் நாம் ஹைஜீனிக் என்று எதனை நம்புகிறோம் எனப் பார்த்தால். ஒரு பொருளை அதன் அடிப்படை உயிரியல் தன்மையே சிதைத்து, உலகத்திலேயே மிக, மிக மோசமான, உச்சபட்ச அயோயக்கித்தனத்துடன் அதனை தயார் செய்து, ஆனால் வெளிபூச்சுக்கு மட்டும் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கிறது போன்ற பாவனையில் நெகிழிப்பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட்களை தான் நாம் மிக, மிகச் சுத்தமான பொருட்களாக நம்புகிறோம்.

மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் வர்க்கம் ஒன்று இருக்கிறது இல்லையா. இன்றைய மக்களில் அந்த வர்க்கம் தான் பெரும்பான்மை, அப்படியான குடும்பங்கள், அப்படி மாதம் ஒரு முறை பொருட்கள் வாங்க செல்லும் போது கூட அதனை சட்டை கசங்காமல் வாங்கி வர வேண்டும் என யோசித்ததின் விளைவு தான். இன்றைய குளிருட்டப்பட்ட பல்பொருள் அங்காடிகள். இவர்களை பொறுத்த அளவில் ரோட்டோரத்திலோ அல்லது வார சந்தைகளிலோ கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கும் பொருட்கள் எதுவுமே ஹைஜீனிக் கிடையாது. அதுவும் இவர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறதே! அதாவது அந்த வார சந்தையில் விற்பனைக்கு அமர்ந்திருக்கும் மனிதனும் அப்படியே கசங்காத ஆடையுடன். Surf Excel சுத்தத்துடன் அமர்ந்து காய்கறி விற்க வேண்டும். அப்பொழுது தான் அந்த நபர் விற்கும் பொருட்களை வாங்குவார்கள். கறை நல்லது என்கிற கதையெல்லாம் தொலைக்காட்சி பெட்டிக்குள் பார்த்து ரசித்து சிலாகிக்க மட்டுமே. நிஜத்தில், அய்யே அழுக்கோட உட்கார்ந்து விற்கிறான் பாரு என வாய்கூசாமல் அந்த மனிதனின் முன்னாடியே சொல்லி விட்டுப் போவார்கள். தன்னுடைய தோட்டத்தில் இருந்து காய்கறியை விளைவித்து பறித்து வரும் ஒரு மனிதன் எவ்வித அழுக்கோடும் இருக்கக் கூடாது எனச் சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கித்தனம் என்பது இவர்களுக்கு உரைக்கவே உரைக்காது. இப்படிப்பட்ட சுத்தப் புலிகளை அதே சுத்ததினாலேயே பயமுறித்தினால் எப்படி இருக்கும். அப்படியான பயத்தை தான் ஒவ்வொரு பெறுநிறுவனமும் உச்சிமுதல் உள்ளங்கால் வரை 99% பாக்டிரியா ஒழிய எங்களுடைய நிறுவன பொருட்களை பயன்படுத்துங்கள் என சொல்லிச், சொல்லி மேலும், மேலும் பயத்தை ஏற்றி, ஏற்றி நன்றாகவே பணத்தை கறந்து கொண்டே இருக்கின்றன.

நமக்கு இது மாதிரியான பொருட்களை வாங்குவதில் செலவாகும் பணத்தை பற்றி கிஞ்சிதும் அக்கறையோ, சுய அறிவோ வேலை செய்யாது. காரணம் பெறுநிறுவனன் நம்மீது தான் அதீத அக்கரையில் ஹைஜீனிக்காக வாழ சொல்கிறான் இல்லையா?. அதனால். இப்படியான பெறுநிறுவனங்களுக்கு நம்முடைய சுத்தத்தின் மீது தான் என்ன ஒரு அக்கரை(ற). அதுவும் காய்கறிகளை எல்லாம் அவனே வெட்டி அதனை மிகச்சிறப்பாக பைக்களுக்குள் அடைத்து, அதனை எத்தனை நாளைக்குள் சமைத்து உண்ண வேண்டும் என நமக்கே யோசிக்க தெரியாத அறிவையும் அவனே யோசித்து, அந்த தேதியையும் அந்த பைகளிலேயே அச்சடித்து விற்பனை செய்யும் பெறுநிறுவனனின் அக்கரை இருக்கிறதே. அதற்கு முன் நம்மூர் ரோட்டோர காய்கறி வியாபாரி எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் அப்படித்தானே. ஆனால் பாவம், ரோட்டோரத்தில் தன்னுடைய விளைப்பொருட்களை பரப்பிவிட்டு வேகாத வெயிலில் அமர்ந்து. தண்ணிர் கூட அருந்தாமல், நம்மை நோக்கி இந்த வெள்ளரிக்காய் நல்லாயிருக்கும் வீட்டுக்கு வாங்கிட்டு போய் புள்ளைங்களுக்கு குடுமா தாயி, இந்த சூட்டுக்கு உடம்புக்கு நல்லது என சொல்வான்(ள்) இல்லையா அந்த மனிதர்களுக்கு எல்லாம் சுத்தத்தை பற்றி என்ன தெரியும். ஒன்றும் தெரியாது என யோசிக்கும் உங்களின் சுத்தத்தின் லட்சணத்தை பற்றி 35 வயதுக்கு மேல் ஆக ஆக நீங்கள் விழுங்கும் மாத்திரைகளே உங்களின் உடலை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பாருங்கள், அதனைப் பார்த்த பிறகு கூட நாம் திருந்த மாடோம். ஏன் என்றால் நாமெல்லாம் மேத்த படித்த அறிவாளிகள் ஆயிற்றே. ஆனால் 40 வயதுக்கு மேலும் அதே காய்கறி கூடையோடு, அதே உழைப்போடு, அதே காய்கறி சந்தையில் வேலை செய்து கொண்டிருப்பர்களைப் பார்த்தால் நமக்கு ஹைஜீனிக்காக தெரியாது. இப்படி அதீத அறிவுடன் இருக்கும் நமக்கு கண்டிப்பாக கடைசி வரை அபிநய சுந்தரி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா தான். வேறு வழியே இல்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *