வாழ்ந்து பார்த்த தருணம்…84

விளம்பரச் சுவைகளில் செத்துப் போன ஆரோக்கியம்…

இன்று காலை, இப்பொழுது குடியிருக்கும் வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில், ஒரு ஒன்றைகிலோ மீட்டருக்கும் அந்த பக்கமாக வயல் வெளியில் மாட்டு கிடை போட்டிருந்தார்கள். இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு மாடு கிடைபோடுதல் அல்லது கிடை மாடுகள் என்றால் என்னவென்பது தெரியுமென தெரியவில்லை. அப்படி வயலில் போடப்பட்டிருந்த கிடை மாட்டுக் கூட்டத்தில் அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் நபரிடம் சென்று கிடை மாட்டு பால் கிடைக்குமா எனக் கேட்கலாம் என வயல்வெளியின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்படி நடந்து மாடுகள் இருக்கும் இடத்தின் அருகாமைக்கு செல்லச், செல்ல உலோக மணி ஓசை ஒன்று, ஒரு அட்டகாசமான தாளலயத்தோடு காற்றில் கரைந்து என்னை நோக்கி வந்து கொண்டே இருந்தது. அந்த லயத்தை ரசித்தபடி மாடுகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். நீங்கள் கிடை மாடுகளை கவனித்து இருந்தீர்கள் என்றால் அப்படியான மாடுகள் முழுவதும் சுத்தமான நாட்டு மாடுகளாகவே இருக்கும். அதன் கொம்புகளும் மிகச் சிறப்பானதாய் நீளமாக வளர்ந்திருக்கும். அதன் கழுத்துகளில் சின்ன இரும்பு உலோகத்தால் ஆன மணியை மாட்டி விட்டிருப்பார்கள். ஒரு கிடை மாடு கூட்டத்தில் குறைந்தது இநூறு மாட்டில் ஆரம்பித்து ஐநூறு மாடுகள் வரை இருக்கும். அப்படி அந்த மாடுகள் கூட்டமாக செல்கையில் அதன் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் அந்த உலோக மணிலிருந்து ஒரு லயமான ஒலி காற்றில் கரைந்து வந்து கொண்டே இருக்கும். அந்த ஒலியின் ஓசையை வைத்து ஒரு மாடு அந்த கிடை கூட்டத்தில் இருந்து வழி தவறினாலும் கண்டுபிடித்து கூட்டத்திற்குள் கொண்டு வந்து விடுவார்கள். அப்படியான மணியின் லயம் ஒலிக்கும் மாடுகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், அங்கிருந்த மாடுகளை கண்காணித்து மேய்சலுக்கு அழைத்துபோகும் நபரிடம் சென்று பால் கிடைக்குமா, எப்பொழுது வந்தால் கிடைக்கும் எனக் கேட்டேன். இல்லங்க இப்ப எல்லாம் பால் கறக்குறதே இல்ல, மேய்ச்ச்சலுக்கு கூட்டிட்டு போய், திரும்ப கூட்டிட்டு போறதே பெரிய வேலையா இருக்கு. பால் கறக்குறதுக்கு ஆள் இல்லை எனச் சொல்லிவிட்டார். பெரும் ஏமாற்றத்தோடு மாடுகளை மட்டும் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

வந்த பிறகு ஏன் அந்த மாடுகளின் பால் கறக்கப்பட்டு விற்பனைக்கு வருவதில்லை என விசாரித்தால். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் இப்பொழுது அப்படியான மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருபவர்கள் சம்பளத்துக்காக தான் அழைத்து வருகிறார்கள். அப்படி அழைத்து வருபவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி வந்து திரும்பவும் கொண்டு போய் சேர்த்தால் போதும் என்கிற மனநிலைக்கு அவர்கள் இயல்பாகவே வந்துவிடுகிறார்கள். அதனால் மேய்ச்சலுக்கு தனி கறவைக்கு தனி என தனித்தனியான ஆட்கள் இல்லை. அதனால் கிடை மாடுகள் விவசாய நிலத்தின் இயற்கை உரத்திற்க்காக மட்டுமே பயன்படும் நிலையை நோக்கி போய் கொண்டிருக்கின்றன. அதுவும் போக அதனை மேய்ச்சலுக்கு அழைத்து வருபவர்களும், அந்த மாடுகள் நன்றாக பசி போக்கும் அளவிற்கான மேய்ச்சல் நிலம் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்காமல், மேய்த்தால் போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அதனால் மாடுகளும் முன்பு இருந்தது போல் ஊட்டமாக இருப்பதில்லை என்பதையெல்லாம் தகவலாகச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதில் இருக்கும் உண்மை மாடுகளை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. அந்த மாடுகளின் உடம்பு கண்டிப்பாக அதன் உயரத்துக்கு ஏற்ற பொலிவுடன் இல்லை. அந்த மாடுகளின் கம்பீரம் என்பது வீழ்ந்து கொண்டே இருக்கிறது. காட்டுயிர்காக துடிக்கும், பதற்றமடையும் மனங்கள் எதுவும், தன் கண்முன்னே குறுகலான மெலிந்த தேகத்தோடு நோயாளியை போல் கடந்து செல்லும் கிடை மாடுகளுக்காக எல்லாம் பதறாது. காரணம் பதற்றமடைவதிலும் கூட நமக்கு இந்த உலகமே உற்று நோக்கும் அளவுக்கான சுயமதிப்பீடு தேவைப்படுகிறது.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய தாத்தா பாட்டிகளின் ஆரோக்கியத்திற்கு மிக, மிக முக்கியமான காரணிகளாக விளங்கிய, அவர்களின் உணவு தட்டுகளில் பெரும் பகுதியை மிக பேரும் ஊட்டத்துடன் ஆக்கிரமித்திருந்த, பால், தயிர், நெய் ஆகிய மூன்றையும் வழங்கிய நாட்டு மாடுகளின் இன்றைய நிலைமை தான் மேலே சொன்னது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் நம்முடைய வீட்டில் நடுநாயகமாக வீற்றீருக்கும் திருவாளர் தொலைக்காட்சி அவர்கள் தான் என்றால் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பது தான் தெரியவில்லை. அதில் வரும் விளம்பரங்களை அப்படியே நம்பி பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டே இருக்கிறோம். அப்படி வாங்கி குவிக்கும் பொருட்களில் எத்தனை, எத்தனை நம்முடைய உடலுக்குள் செல்கிறதோ, அத்தனை தூரம் அந்த பொருள் நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை சிதைக்கும் என்கிற அறிவுகூட நமக்கு இல்லவே இல்லை. அம்மா செய்த நெய் போலவே மணல் மணலாய் என்கிறான் ஒருவன். நலம் அன்புடன் கிராமத்திலிருந்து வரும் பால் என்கிறான் ஒருவன். எங்களுடைய தயிரை சுவைத்தால் நீங்கள் இயற்கையின் குளுமையை உணர்வீர்கள் என்கிறான் ஒருவன். அ என்றாலே எங்களுடைய நிறுவன தயிர் தான் என்கிறான் இன்னொருவன். இத்தனை களேபரங்களுக்கும் நடுவில் நாட்டு மாடுகள் எனக்கு எதுவுமே தெரியாது என எழும்பும் தோழுமாக மேய்ச்சல் நிலைத்தை தேடி அலைந்து கொண்டே இருக்கின்றன. நெய் என்றால் மணல் மணலாய் இருக்க வேண்டும் என்றும், பால் என்றால் தூய்மையான வெள்ளை நிறத்தில் surf excelலில் துவைத்தது போல சுத்தமாக கெட்டியாக இருக்கவேண்டும் என்றும், தயிர் என்றால் அது எவ்வளவு கெட்டியாக இருக்க வேண்டும் என எவனோ ஒருவன் வந்து நமக்கு பாடமும் நடத்தி பணத்தையும் வாங்கிச் செல்கிறான். நாமும் டான்ன்னு ஆறு மணி ஆச்சுன்னா நம்ம வீட்டு வாசல்ல பால் பாக்கெட் வந்திரும் தெரியுமா. எனக்கெல்லாம் ஆறு முப்பதுக்கு காபி அல்லது டீ குடிக்கலைன்னா தலைவலி வந்து அப்புறம் எல்லா வேளையும் கெட்டிரும், என இருக்கும் இடத்திலேயே எல்லாவற்றையும் வரவழைத்து ஆகப்பெரும் சோம்பேறிகளாய் வளம் வருவோம். நாட்டு மாடு நலிஞ்சு போன நமக்கென்ன, நாசமாபோன நமக்கென்ன. நம்மை வழி நடத்தி செல்லத் தான் தொலைக்காட்சி விளம்பர விஞ்ஞானிகள் இருக்கிறார்களே. நம்முடைய ஆரோக்கியமும் நாசமாய் போனவுடன். எந்த மருத்துவமனையில் போய் பார்க்கலாம் என்பதையும் அந்த விளம்பர விஞ்ஞானிகளே சொல்லி விடுவார்கள். மகிழ்ச்சி.

கடைசியாக :

கிடை மாடுகள், அதனுடைய மேய்ச்சல் என இப்படியான விஷயங்களை தேடி போய் தெரிந்து கொள்கையில் தான், அதனைப் பற்றி தேடி, தேடி படிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. அதனையும் தேடி தேடி வாசிக்கிறேன். வாசித்தலின் மூலம் என் கண்முன் விரியும் முகத்தில் அறையும் நிதர்சனத்தின் வலி(ழி)யே என்னை இந்த இயற்கையை பெரும் காதலோடு நேசிக்கும் மனிதனாக உயிர்ப்போடு வைத்திருக்கும் என ஆணித்தரமாய் நம்புகிறேன்.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *