வாழ்ந்து பார்த்த தருணம்…95

எந்திரிச்சே நிக்க முடியலையாம்…

போன கட்டுரையை போல பல சம்பவங்களின் வழியே உணர்ந்து கொண்ட விஷயங்கள் தான் இதுவும். இதனை எழுத வேண்டுமா என பலமுறை யோசித்து அதன் பின் கண்டிப்பாக எழுத வேண்டும் எனத் தோன்றியதால் இந்தப் பதிவு. முதல் சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு அல்லது சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. வருடம் சரியாக நினைவில் இல்லை. ஆனால் நடந்த சம்பவம் அப்படியே நினைவடுக்குகளில் படிந்திருக்கிறது. காரணம் நடந்த சம்பவம் அப்படி. அந்தச் சமயம் ஐந்தாறு நண்பர்கள் சேர்ந்து ஒரு வார இறுதி நாளில் எங்கள் குழுவில் உள்ள ஒரு முக்கியமான நண்பனின் ஊருக்குச் செல்லலாம் என ஏகமனதாக முடிவெடுத்தோம். அதற்கு முக்கியமான காரணம், அவனுடைய ஊரில் இருந்து எளிதில் போய் சேரக்கூடிய தூரத்தில் இரண்டு மூன்று சுற்றலாத் தளங்கள் இருந்தன. அதுவே அந்த நண்பனின் வீட்டிற்கு செல்ல போதுமான காரணமாக இருந்தது. வார இறுதி நாளோடு சேர்த்து அடுத்து தொடங்கும் வாரத்தின் முதல் நாளும் விடுமுறை நாளாக அமைந்திருந்தபடியால், முதலில் நண்பனின் வீட்டை அடைந்து. பிறகு அங்கே மதிய உணவை முடித்து விட்டு, அப்படியே கிளம்பி அருகில் இருக்கும் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது தான் திட்டம். நாங்கள் இருந்த பெருநகரத்தில் இருந்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து நண்பனின் ஊரை நோக்கி பயணம் ஆரம்பமானது. வார இறுதி நாளான சனியன்று அதிகாலை கிளம்பி விட்டோம். நண்பர்கள் குழுவாக பயணிக்கிறோம். அதுவும் நல்ல வாகான ஒரு வாகனத்தில், வாகனத்தை ஓட்டியவனும் நண்பனே என்பதால் ஆட்டம் பாட்டத்திற்கு குறைவேயில்லை. வண்டி புறப்பட்டதிலிருந்து ஒரே அதகளம் தான், போகும் வழியிலேயே காலை உணவை இந்த ஊரில், இந்த உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும், அதுவும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது உட்பட திட்டங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே திட்டமிடப்பட்டிருந்தன. திட்டமிட்டபடியே அனைத்தும் செவ்வனே மிக சிறப்பாக போய்க் கொண்டிருந்தது. ஒரு வழியாக நண்பனின் வீட்டை அடைந்தாயிற்று. நண்பனின் ஊர் முற்றிலும் நகரமும் அல்லாது முழுவதும் கிராமமும் அல்லாது இடைப்பட்ட நிலையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஊர். நண்பனின் வீட்டில் மிக சிறப்பான முறையில் அசைவ உணவு தயாராக இருந்தது. அதுவும் ஏற்கனவே திட்டத்தில் இருந்தது தான். களத்தில் இறங்கி நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுக் கிளம்பினால் போதும் என்பதில் அனைவரும் தீர்மானமாக இருந்தோம். காரணம் நண்பனுடைய அம்மாவின் அக்கறை கலந்த அட்டகாசமான சமையலின் ரூசி அப்படி. வீட்டின் பிரதான அறையில் அனைவருக்கும் தலைவாழை இலை தயாராக இருந்தது, தரையில் அமர பாய் விரிக்கப்பட்டிருந்தது. எந்த இலை பெரியதாக இருக்கிறது என அனைவரும் ஓரக்கண்களால் இலையை அளந்தபடி தேர்ந்ததெடுத்த இலைகளில் சின்ன தள்ளுமுள்ளுகிடையில் அமர்ந்தோம். அமர்ந்த நிமிடத்தில் இருந்து அனைவரின் கவனக் குவிதலும் இலையில் வைக்கப் போகும் உணவு பதார்த்தங்களின் மீது தான் இருந்தது. ஆடிய ஆட்டத்தில் அனைவருக்கும் கொலைப் பசி வேறு. ஒவ்வொரு பதார்த்தமாக களத்தில் இறங்க, வாழையிலைனுள் மிகச் சிறப்பான அதகளமான ஆட்டம் ஆரம்பமானது. அப்பொழுது வரை யாரும் ஒரு விஷயத்தை கவனிக்கவில்லை.

அந்த விஷயம் எல்லோரும் தரையில் மிகச் சிறப்பாக சம்மணமிட்டு அமர்ந்து ஆட்டத்தை ஆரம்பித்திருக்க. எங்களின் நண்பர்கள் குழுவில் இருந்த ஒருவன் மட்டும், சம்மணமிட்டு அமர முடியாமல், தனது இரண்டு கால்களையும் பெருக்கல் குறியை போல் வைத்துக்கொண்டு அமர்ந்து, குனிந்து சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். அவனுடைய நிலையை பார்த்த நண்பனின் அம்மா, அவனுக்காக ஒரு மர இருக்கையை எடுத்து வந்து அதில் அமர்ந்து தட்டில் சோற்றை போட்டுச் சாப்பிடச் சொன்னார். அவனும் அமர வாகாக இடம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் சாப்பிட ஆரம்பிக்க. அப்பொழுது அந்த அறையின் ஓரத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த நண்பனின் அப்பாவின் அம்மா. அதாவது நண்பனின் அப்பத்தா. நண்பனின் அம்மாவுக்கு மாமியார். மர இருக்கையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்த நண்பனை பார்த்துக் கேட்டாரே ஒரு கேள்வி. அந்தக் கேள்வி தான் அதகளமே. இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த நண்பனை பார்த்து, ஏன் கண்ணு, ஒரு அரைமணி நேரம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து உன்னால் சாப்பிட முடியவில்லையே. நீ எல்லாம் எப்படி கல்யாண மேடையில் ஒரு நேரம் உட்கார்ந்து பொண்ணு கழுத்துல தாலி கட்டுவ. அங்கயும் இப்படி மர நாற்காலிய தூக்கிட்டு போவியா எனக் கேட்க. அவர் கேட்ட கேள்விக்குள் சூசகமாக ஒளிந்திருந்த பல வகையான அர்த்தங்களும் ஒரு நொடியில் எனக்கும் அந்த வீட்டின் நண்பனுக்கும் புரிந்துவிட, குபீரென வெளிவந்த சிரிப்பில், எனக்குப் புரையேறிவிட, நண்பன் சிரிப்பை அடக்க முடியாமல் குடித்துக் கொண்டிருந்த தண்ணிரை அப்படியே முன்னால் பீச்சி அடித்துவிட்டான். அதன் பின் அசூவாசமாகி சாப்பிட்டு முடிக்க வெகு நேரம் ஆனது. அதிலிருந்து அந்தப் பயணம் முழுவதும் அந்த பேச்சுத் தான். அதற்கு அடுத்த நிகழ்வும் அதே அப்பத்தாவால் நடந்தது தான் அதகளமே. சுற்றுலாதளங்களின் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் நண்பனின் வீட்டிற்கு வந்து விட்டுச் செல்ல வேண்டும் என்கிற திட்டத்தின்படி, திங்கள் மாலை மீண்டும் நண்பனின் வீட்டை அடைந்தால், எங்களின் வருகைகாக சுட சுட தேநீர் தயாராக இருந்தது. தேநீர் அருந்திவிட்டு கிளம்ப வேண்டும் என முடிவு செய்திருந்தோம். அந்த நேரம் வீட்டில் இருந்த அந்த அப்பத்தாவின் மடியில் எட்டு மாதமே ஆன பக்கத்து வீட்டு அக்கா ஒருவரின் ஆண் குழந்தை இருந்தது. மடியில் இருக்கும் போதே அந்த குழந்தை சிறுநீர் கழித்துவிட, அப்பத்தா முகம் சுளிக்காமல் அதனை எற்றுக் கொண்டார். ஆனால் இப்பொழுது அப்பத்தாவிடம் இருந்த அடுத்த அஸ்திரம் வந்தது. அவர் அருகில் அமர்ந்திருந்த பக்கத்து வீட்டு அக்காவை பார்த்து ஏண்டி என்ன சாப்பிடுற ஒழுங்கா சாப்பிட்டு ஒழுங்கா தாய்பால் கொடுக்க மாட்டியா. ஆம்புள புள்ள பெத்துவச்சுருக்க மடியில் இருக்கும் போது ஒண்ணுக்கு அடிச்சான்னா சும்மா சர்ர்ருன்னு நம்ம மூஞ்சிக்கு வரவேண்டாமா என்னத்த புள்ளய பெக்குறீங்களோ எனச் சொல்ல. நாங்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் நண்பனை திரும்பி பார்க்க நண்பன் என்ன சொல்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

மூன்றாவது சம்பவம் இது போன கட்டுரையில் குறிப்பிட்டிருந்த என்னுடைய நண்பன் அடுத்ததாக சென்ற மலையெற்றத்தின் போது நடந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டது. இம்முறை நண்பன் எந்த ஒரு மலையேற்ற குழுவுடனும் இணையாமல், தங்களுக்குள் இருக்கும் நண்பர்களாக முடிவு செய்து, ஒரு ஐந்து நண்பர்கள் இணைந்து ஒரு முக்கியமான வனப்பகுதிக்கு தக்க வழிகாட்டியுடன் மலையேற முடிவு செய்திருக்கிறார்கள். ஒரு சுபமான நாளில் மலையேற்ற பயணம் துவங்கியிருக்கிறது. அந்த மலையின் உச்சி அதன் அடிவாரத்தில் இருந்து பதிமூன்று கீலோமீட்டர்கள் தொலைவினைக் கொண்டது. மலையேற ஆரம்பிக்கும் முன் அடிவாரத்தில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மலையேற ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு கீலோமீட்டர்கள் தான் ஏறி இருப்பார்கள் மலையேறிய நண்பர்கள் குழுவில் இருந்த இரண்டு பேர் இதற்கு மேல் எங்களால் முடியாது என பின்வாங்கி விட்டார்கள். உடனே அவர்களுடன் சென்ற வழிகாட்டி, தன்னுடைய அலைபேசியின் வழியே பேசி அடிவாரத்தில் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து, அந்த இருவரை மட்டும் நீங்கள் இறங்கிப் போனால் வாகனம் தயாராக இருக்கும், இருவரும் அந்த வாகனத்தில் போய் தங்குமிடத்தில் ஓய்வெடுங்கள் நாங்கள் மலையேற்றத்தினை முடித்து விட்டு வருகிறோம் என இருவரையும் அனுப்பியிருக்கிறார். அப்புறம் மீதம் இருந்த மூவர் மற்றும் அவர்களுடன் வழிகாட்டி என நால்வரும் மலையின் உச்சியை அடையும் வரை எதனையும் பேசிக் கொள்ளவில்லை. மலையின் உச்சியை அடைந்ததும் அங்கே வீசும் ஏகாந்த காற்றை அனுபவித்தபடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை படிக்கும் யாராவது அப்படியான மலை உச்சிக்கு சென்று இருக்கிறீர்களா, அப்படி சென்று இருந்தால் நம்முடைய உடலை வருடிச்செல்லும் ஏகாந்த காற்றை அனுபவித்து இருக்க முடியும். அப்படியான காற்றினுடைய வருடலின் இடையே நடந்த உடையாடலில், அப்பொழுது அந்த மூவரையும் பார்த்து வழிகாட்டி சொன்னது தான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். அந்த வழிகாட்டி என்ன சொன்னார் எனச் சொல்வதற்கு முன்னால் ஒரு தகவல். இரண்டு கிலோமீட்டர்களிலேயே மலையேற முடியாது என திரும்பிப் போன இருவரும் திருமணம் ஆகாதவர்கள், சரி இப்பொழுது வழிகாட்டி என்ன சொன்னார் எனச் சொல்லிவிடுகிறேன், அவர் சொன்னது இவர்கள் எல்லாம் திருமணம் செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள் என தெரியவில்லை, இன்றைக்கு ஆர்வத்தில் மலையேற வரும் பாதிக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் இப்படி இருப்பதைப் பார்க்கிறேன். இவர்கள் தங்களின் உடல் திறனை வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது. இவர்கள் எல்லாம் திருமணம் செய்து என்னத்த கிழிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை எனச் சொல்லிவிட்டு தொடர்ந்து அவர் பேசியதாக நண்பன் சொன்னதை இங்கே அச்சில் ஏற்ற முடியாத அளவு தணிக்கை செய்யப்பட வேண்டியவைகள், இந்த வழிகாட்டி மட்டுமல்ல, அந்த அப்பத்தா தனிப்பட்ட முறையில் நண்பனை பற்றியும், குழந்தை சிறுகழித்ததை வைத்தே சொன்ன வார்த்தைகளை பற்றியும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டதையும் இங்கே பொதுதளத்தில் அச்சில் எழுதமுடியாது. இவையெல்லாவற்றையும் பார்க்கையில் இன்றைய தலைமுறை வாழும் வாழ்க்கை எப்படியானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். உணவு, உறக்கம், உடற்பயிற்சி என எதிலுமே தெளிவான அக்கறையோ, அறிவோ, புரிதலோ இல்லாமல் தங்களுக்கு சரியெனப் படுவதையும், இணையத்தில் எதனை அவர்கள் தேடி கண்டடைக்கிறார்களோ அதன்படியுமே வாழ பழகி கொண்டிருக்கிறார்கள. அது போன்ற ஒரு வாழ்வியல் சூழலை அவர்கள் அணுகும் போது கொண்டாட்டமாக தான் இருக்கும். ஆனால் அதற்குக் கொடுக்கப்படும் விலை என்பது தன்னுடைய முழு வாழ்க்கையுமே என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொண்டால் நல்லது. அதையும் தாண்டி இன்றைக்குப் பல பேரிடம் உங்களுக்கு பாடத் தெரியுமா எனக் கேட்டால் உடனடியாக செம்மயா பாடுவேன் சகோ எனச் சொல்வார்கள். காரணம் இங்கே பெரும்பாலானவர்களுக்கு எவ்வித பயிற்சியும் செய்யாமலேயே தன்னால் சிறப்பாக பாட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்படியான நபர்களிடம் ஒலிவாங்கியை கொடுத்துப் பார்த்தால் தான் லட்சணம் தெரியும். ஆனால் எல்லோரிடமும் ஒலி வாங்கியைக் கொடுத்துப் பார்த்து அதன் பின் பாட வைப்பது சாத்தியமா?. அதற்கு முறையாக பாடப் பயிற்சி எடுத்தவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒலிவாங்கியை கொடுத்து விடலாமே. இறுதியாக நக்கலாக சுட்டிக்காட்ட உருவாக்கப்படும் பல புகைப்பட வடிவமைப்புகளில் சில சமயம் சூட்சமமாக சில புகைப்படங்களை இணைய வெளியில் பதிவிட்டு இதனை புரிந்து கொண்டவன் பிஸ்தா எனக் குறிப்பிடுவார்கள். அதைப் போன்று இந்த கட்டுரையின் வழியே எப்படியானவர்கள் பிஸ்தாக்கள் என்பது ஊரறிந்த ரகசியம். மகிழ்ச்சி.

கடைசியாக :

மீண்டும் ஒரு முறை, இந்த கட்டுரையுடன் பகிர்ந்திருக்கும் புகைப்படத்திற்க்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்பதை புரிந்து கொண்டவர்கள் பிஸ்தா.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *