வாழ்ந்து பார்த்த தருணம்…96

பிடிக்கவில்லையா அல்லது விருப்பமில்லையா…

தலைப்பில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளுக்குள் ஒரு மிகப் பெரிய சூட்சமம் இருக்கிறது. பல நேரங்களில் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் தான் நம்மை பற்றிய ஒரு பிம்பத்தையும், அந்த பிம்பத்தின் பின்னாலான பல விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாழ்க்கை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். குடும்ப நண்பர் ஒருவர் நீண்ட நாளாக எங்களது வீட்டிற்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் பணிச் சுமை காரணமாக அவரது வீட்டுக்கு செல்ல முடியாமல் தள்ளி போய்க் கொண்டே இருந்தது. ஒரு சுப நாளில் குடும்பத்துடன் அவர் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு, காலை உணவை முடித்துவிட்டு அவரது வீட்டுக்கு கிளம்பிப் போனோம். வழக்கமான நலம் விசாரிப்புகள் எல்லாம் முடிந்து, இரண்டு குடும்ப உறுப்பினர்களும் பிரதான அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஒரு சின்னத் தகவல் அந்தப் பிரதான அறையின் சுவற்றில் ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டி மாட்டப்பட்டிருந்தது. போனதில் இருந்து பேச்சிலேயே கவனம் இருந்ததால், தொலைக்காட்சிப் பெட்டி மீது யாருக்கும் கவனம் போகவில்லை. மதிய நேரம் ஆனது. உணவு அருந்த அனைவரும் அமர்ந்தோம். அப்பொழுது அந்த வீட்டில் இருக்கும் ஒருவர் தம்பி அத போடுங்க அப்படியே பார்த்துக் கொண்டே சாப்பிடலாம் எனச் சொன்னார். உடனே அந்த வீட்டில் இருந்த மற்றவர் தொலைக்காட்சி பெட்டியினை இயங்க வைக்க அதன் அருகில் போக, வேண்டாமே உணவருந்துகையில் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புவதில்லை எனச் சொன்னேன். உடனே தொலைக்காட்சி இயக்கம் நிறுத்தப்பட, அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். அப்படியே மதிய உணவை அனைவரும் முடித்துவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், தொலைக்காட்சிப் பெட்டியை பற்றி பேச்சு வந்தது. அப்பொழுது அந்த குடும்ப நண்பர் இப்படிச் சொன்னார். தொலைக்காட்சி பெட்டியை இயக்க போகையில் நீங்கள் விருப்பமில்லை எனச் சொன்னதால் தான் எனக்கு உடனடியாக அதனை இயக்க வேண்டாம் எனத் தோன்றியது. ஒருவேளை நீங்கள் எனக்கு பிடிக்காது எனச் சொல்லியிருந்தால், மற்றவர்களுக்கு பிடிக்குமே என யோசித்து அதனை இயக்கி இருப்பேன். ஆனால் நீங்கள் விருப்பமில்லை என்று சொன்ன வார்த்தை தான் என்னை தொலைக்ககாட்சி பெட்டியை இயக்க வேண்டாம் எனத் தோன்ற வைத்தது எனச் சொன்னார்.

இப்படியான ஒரு சின்ன வார்த்தை மாறுபாடு என்ன மாதிரியான மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என கவனித்தால் மிக ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் நாம் தான் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நாவில் இருந்து வெளிவரும் வார்த்தைகளை பற்றி யோசிப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் இங்கே உருவாகும் பல பிரச்சனைகளுக்கு வார்த்தைகளே அடிப்படையான காரணமாக இருந்திருக்கின்றன. ஒரு வார்த்தையின் வழியே உருவாகும் சாதாரணமான சின்ன புரிதல் மாறுபாடு, சகமனிதனின் உயிரையே கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுக்க வைத்து விடுகிறது. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தில் முக்கியமானது பேச்சு எனச் சொல்வார்கள். விலங்குகள் பேசுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் எளிதில் புரிந்து கொள்கின்றன. நாம் தான் பல நேரங்களில் மனிதர்களாகவே நடந்து கொள்வதில்லை. எங்கே, யாரிடம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறோமா என்றால், கண்டிப்பாக இல்லை. கட்டுப்பாடு இல்லாது மனதினுள் என்ன தோன்றுகிறதோ, அதனை நாமாவது கட்டுப்படுத்தி பேசப் பழக வேண்டும். ஆனால் இங்கே பல நேரங்களில் பேசி முடித்த பின் தான் யோசிக்கவே செய்கிறோம். ஆகா அப்படி பேசியிருக்க கூடாதோ என யோசிக்கிறோம். சில பேருக்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு பிறகு தான் பேசியது எவ்வளவு பெரிய தவறு என உறைக்கிறது. இன்னும் சில பேருக்கு கடைசி வரை உறைப்பதேயில்லை. இங்கே பல நேரங்களில், பல இடங்களில் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த தெரியாதவர்கள் தான் வீரர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள். அப்படியானவர்களின் பேச்சை கேட்டு வளர்பவர்கள் எப்படியானவர்களாக இருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள், பல நேரங்களில் அவன் என்ன வார்த்தை சொன்னான் தெரியுமா?, அதனால நான் பார்த்த வேலைய ……….. போச்சுன்னு தூக்கி போட்டு வந்துட்டேன் எனப் பீற்றி கொள்பவர்கள், கொஞ்சம் நிதானமாக இந்த வேலை போனதால் தானும் தன்னை சார்ந்தவர்களும் எந்த மாதிரியான பாதிப்புக்குள்ளாவார்கள் என யோசிப்பதேயில்லை.

வாழ்க்கையில் பல நேரங்களில் ஒன்றுமேயில்லாத பல விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியாவது, நாம் நித்தம், நித்தம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்குக் கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும். வார்த்தைகளைக் கட்டுபடுத்தி பேச முடியவில்லையெனில் கண்டிப்பாக அப்படியான தருணங்களை மெளனமாக கடந்துவிடுதல் நலம். பல நேரங்களில் பேசிக்கிட்டே இருக்கேன் ஒண்ணுமே பேசாமா போறீங்க என்பது மாதிரியான பல தருணங்கள் வந்து போயிருக்கின்றன. ஆனாலும் பிடிவாதமாக பேசாமல் இருந்த துண்டு. காரணம் சில நேரங்களில் நம்மை நோக்கி வரும் வார்த்தைகளை கையாள முடியாத கையேறு நிலையில் இருக்கையில், மனம் மிகப்பெரும் கொந்தளிப்பில் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது. அது போன்ற நேரங்களில் உங்களின் இதயத்துடிப்பை கவனித்து பாருங்கள் நீங்கள் நூறு கீலோ மீட்டர் வேகத்தில் ஓடினால் கூட இப்படியான இதயத்துடிப்பு இருக்காது என்கிற அளவு இதயம் எகிறி அடித்துக் கொண்டிருக்கும். அது போன்ற நேரங்களில் வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது உத்தமம். இல்லையெனில் விளைவுகளும், இழப்புகளும் மிக, மிக மோசமாக இருக்கும். இதனை பலமுறை பல சந்தர்ப்பங்களில் விழுந்த அடிகளின் வழியே உணர்ந்த பிறகு தான் மனம் யோசிக்க ஆரம்பித்தது. இப்பவும் அப்படியான தருணங்களை கண்டிப்பாக கடந்து வர வேண்டியிருக்கிறது. தொடர்ச்சியாக வாங்கிய அடியும், அதனை உணர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கும் பயிற்சியினாலேயே மனதையும், வார்த்தைகளையும் கட்டுப்படுத்தும் வித்தையை ஓரளவுக்கு நாக்கு கற்றுக் கொண்டிருக்கிறது. நகைசுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்றில் ஒரு சிறுவன் வடிவேலுவை வார்த்தைகளினால் உசுப்பெற்றியே அவரின் உடலில் இருக்கும் ஒரு சீறுநீரகத்தை எடுத்து விடுவான். அந்த நகைசுவை காட்சியை கண்டிப்பாக வெறும் நகைச்சுவை காட்சியாக கடந்து போக முடியவில்லை. அந்தக் காட்சியிலாவது ஒரு சீறுநீரகத்தோடு வடிவேலுவை விட்டுட்டு விடுவான் அந்தச் சிறுவன். மற்றொரு சீறுநீரகத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என நம்பிக்கையை இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் அதைவிட மோசமான இழப்புகளை நாம் மோசமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் கொடுத்துவிடும். அப்புறம் என்னப்பா அடிவாங்குன கைப்புள்ளக்கே இம்புட்டு அடின்னா, அடிவாங்குனவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிற என, ஊர் பேசிவிட்டு போய் விடும். ஆனால் வாங்கிய அடியின் இழப்பினால், இந்த ஊர் இன்னுமாடா நம்மள நம்புது என நாம் அவர்களுளின் பேச்சுக்கு பதிலாக நகைசுவை வசனம் எல்லாம் பேச முடியாது. காரணம் நாம் வாங்கிய அடியின் வீரியமும், வலியும் அப்படி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *