வாழ்ந்து பார்த்த தருணம்…99

ஏகாந்த பெருவெளி காற்றினூடே காதலில் கரைந்தபடி ஓர் இசை நடை…
முன்னெச்சரிக்கை:
இசையை நேசிப்பவர்கள், இளையராஜாவின் இசையில் முழ்கி திளைப்பவர்கள், வாசிப்பை விரும்புகிறவர்கள் தவிர, மற்றவர்கள் இங்கே இப்படியே நடையை கட்டிவிடலாம், படித்துவிட்டு அதன்பின் என்ன இவ்வளவு நீநீநீளளமாக இருக்கிறது என வருத்தப்பட வேண்டாம், மகிழ்ச்சி…
இரண்டு நாளைக்கு முன்னதாக வேறு ஒரு தகவலை தேடுவதற்காக இணைய வெளியில் சில காணொளிகளிடையே அலைந்து திரிந்தபடியே இருந்தேன். அந்த நேரம் எனக்கு மிக, மிக பிடித்தமான ராகதேவனின் இசை கோர்வை ஒன்று கண்ணில் பட்டது. அதன் கீழே மிக சிறப்பான ஒலித் தரத்துடன் பதிவேற்றப்பட்டிருக்கிறது என எழுதியிருந்தது. உடனடியாக ஒலிவாங்கியை தேடி எடுத்து, காதுக்குள் பொருத்தி, அப்படியே இணையத்தில் இருந்த அந்தப் பாடலை ஓட விட்டால், இசையின் முதல் புள்ளியில் இருந்தே அப்படியே மனம் கரைய ஆரம்பித்தது. உண்மையிலேயே மிக சிறப்பான ஒலித் தரத்துடன் தான் இருந்தது. அப்படியே லயித்து சிறிது நேரம் தான் கேட்க முடிந்தது. சரி அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என தினப்படி வேலைகளில் முழ்கிவிட்டேன். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஒரு முக்கியமான பணிக்காக, சில முன் தயாரிப்புகள் வேறு கடுமையாக இருந்ததால், திரும்பவும் நிதானமாக லயித்து கேட்கும் வாய்ப்பு கிடைக்கவேவில்லை. சில நேரங்களில் அந்தப் பாடலின் முதல் தொடக்க இசை மனத்திற்குள் வந்து வருடி, தம்பி டீ இன்னும் வரல என நினைவுபடுத்திவிட்டு போகும். அந்த நேரம் இன்று கண்டிப்பாக கேட்க வேண்டும் என தோன்றும். ஆனால் கடந்த முன்று, நான்கு நாட்களாக அன்றாட அலுவல்களின் சுமையை தாண்டிய சில வேலைகளும் இருந்ததனால், அந்தப் பாடல் அப்படியே இருந்தது. சில நேரம் பாடலை கேட்கத் தொடங்கும் அந்த நிமிடம் ஏதாவது வேலை வந்துவிடும். இல்லையெனில் அப்பொழுது தான் ஏதோ முக்கியமான விஷயம் ஒன்றைக் கேட்க வேண்டும் என யாராவது, அரத மொன்னையான விஷயத்தினை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பார்கள். தப்பிக்கவும் முடியாது. அந்தப் பாடலோ போடா நீ எல்லாம் அதுக்கு சரிபட்டு வர மாட்ட என என்னைப் பார்த்து நக்கலடித்து கொண்டிருக்கும்.
சரி இது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்து காலை எல்லோரும் எழுவதற்கு முன்பாக கேட்டுவிடலாம் என முடிவெடுத்தேன். என்னுடைய தினசரி காலை விடியல் அதிகாலை 3:30 மணியிலிருந்து 3:45க்குள் விடிந்துவிடும். அதன் பின் காலை 4 மணியிலிருந்து 5:30 மணி வரை இணையவெளியின் வழியே பலவிதமான யோக பயிற்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். அதன்பின் 5:30 மணியிலிருந்து 6:30 மணி வரை உடற்பயிற்சி. பின்னர் நடை. அந்த நடை சராசரியாக ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு கீலோ மீட்டர்கள். இப்படித் தான் ஒவ்வொரு நாள் விடியலும் தொடங்கும். இன்றும் அப்படியே. காலை எல்லாவிதமான பயிற்சிகளும் முடித்து நடையினை தொடங்குகையில் மறக்காமல் ஒலிவாங்கியை எடுத்துக் காதுகளுக்குள் பொறுத்திவிட்டு, நடை போவதற்காக நெடுஞ் சாலையில் இறங்கினால், ஆகா, மெலிதான குளிர்காற்று அப்படியே உடலை வருட, முந்தைய நாள் மேகம் தன்னுடைய மழைக்கரங்களால் போட்டிருந்த ஓவியத்தின் மிச்சங்கள் அப்படியே, ஆங்காங்கே, தார் சாலையின் சில இடங்களில் தென்பட, கண்முன் விரிந்த வெட்ட வெளியின் பசுமை, முந்தய இரவில் தன்னை அணைத்து சென்ற மழைத்துளிகளின் குளிரினை தனக்குள் ஒளித்து வைத்தபடியே மிகச் சிறப்பான பிரகாசமான பசுமையை வெளியிட்டு கொண்டிருந்தன. இதனை எல்லாம் மிகச் சிறப்பாக உள்வாங்கியபடி ஒலிவாங்கியை எடுத்து காதுகளில் பொறுத்திவிட்டு, அப்படியே திரும்ப, திரும்ப அதேப் பாடலினை கேட்கும் அமைப்பைச் சொடுக்கிவிட்டு, மெலிதாக நடையினை தொடங்கிப் பாடலை ஒலிக்க விட்டால் அந்த கணம் அப்படியே காதலாகி கரைய ஆரம்பித்தது, அந்த கணத்தை காதலாக்கி கரையவிட்ட பாடல், தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி எனும் பாடல், சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே அதன் துவக்க புள்ளியில் இருந்தே, நம் மனம், உடல், எண்ணம் என சகலத்தையுமே கரைந்து போக வைக்கும் தன்மை கொண்டது, துவக்கப்புள்ளியில் இருந்தே அப்படியான கரைதலை தன்னுள் மிக, மிகச் சிறப்பாக ஒளித்து வைத்திருக்கும் மிக அட்டகாசமான பாடல் தான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல்.
இளையராஜாவினுடைய பாடல்களையும் தாண்டி, அவரின் இசைக்கோர்வைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு தெரியும், அவருடைய இசை நம்மனதினுள் எப்பேர்ப்பட்ட ரசவாதத்தை நிகழ்த்தும் என்பது, பொதுவாக இளையராஜா இசை அமைக்கும் படங்களின் எழுத்துக்கள் திரையில் தொடங்கும் புள்ளியில் இருந்தே அவரின் அதகளம் ஆரம்பிக்கும், அதற்கு மிக சிறப்பான பல உதாரணங்கள் உண்டு, அதில் ஒன்றை மட்டும் இங்கே எடுத்துக்கொள்கிறேன், வாய்ப்பிருப்பவர்கள் இணையத்தில் போய் கோபுரவாசலியே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள திரையில் தோன்றும் எழுத்துக்களின் பின்னனியில் தொடங்கும் இசை கோர்வையை கேட்டுப்பாருங்கள், கிட்டத்தட்ட அந்த இசைக்கொர்வை 2 நிமிடங்கள் 51 நொடிகள் ஓடக்கூடியது, மிகச்சரியாய் ஊட்டி மலையின் மீது ஏற நிராவியில் இயங்கும் மலை ரயிலின் ஓசையில் தொடங்கும் இசை, சரியாக 16வது நொடியில் இசையரசரின் புல்லாங்குழலுக்கு மாறும், அந்த புள்ளியில் இருந்து அந்த இசை 2:51நொடிகளில் முடிவடையும், அந்த இசை அடுத்து நம்முன் திரையில் விரியப்போகும் ஒட்டுமொத்த திரைப்படத்தின் கதையையும் முழுவதுமாக, இசையின் வழியே நம்முடைய ஆன்மாவுக்கு கடத்தியிருக்கும், கோபுரவாசலியே திரைப்படத்தின் கதையை முழுவதுமாக அறிந்தவர்கள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள், அப்பொழுது புரியும், தளபதி திரைப்படத்தின் பாடலை சொல்ல தொடங்கி ஏன் இதனை சொல்கிறேன் என தோன்றலாம், காரணம் கோபுரவாசலிலே திரைப்படத்தின் தொடக்க பின்னனயிசையை போல் தான் தளபதி திரைப்படத்தின் பாடலின் இசையும், பாடலின் முதல் வார்த்தையான சுந்தரி என்கிற வார்த்தையை உச்சரிக்க தொடங்கும் முன்னர் வரை வரும் இசை கோர்வை இருக்கிறது இல்லையா, அதுவுமே இந்த பாடல் சொல்ல வரும் ஒட்டுமொத்த கதையையும் சொல்லிவிடும், இந்த பாடலின் கதையென்பது போருக்கும் சென்றிருக்கும் மன்னவனை நினைத்து ஏங்கும் மனைவி, அவனது வருகைக்காக காத்திருப்பின் வழியே உணரும் வலியை பாடுகிறாள், அவளது பிரிவை தாங்காத மன்னவனும் பிரிவின் வழியை சொல்ல, இறுதியில் போரில் பெற்ற வெற்றியோடு மனைவியிடம் வந்தடைகிறான். இது தான் பாடல் வெளிப்படுத்தும் கதையின் சாரம்.
பாடலை காணொளி இல்லாமல் வெறும் ஒலிக்கோர்வையாக கேட்டீர்கள் என்றால் பாடலின் முதல் வார்த்தை உச்சரிக்க படுவது 47வது நொடியில், பாடலை காணொளியாக பார்த்தீர்கள் என்றால் முதல் வார்த்தை உச்சரிக்கப்படுவது 51வது நொடியில், அந்த முதல் வார்த்தை உச்சரிக்க படும் முன்னர் இசைக்கும் இசைகோர்வை இருக்கிறது இல்லையா, அந்த இசை கோர்வைக்குள்ளாகவே மேலே குறிப்பிட்டிருந்த பாடலின் ஒட்டுமொத்த கதையையும் மிகச்சிறப்பாக நம்முடைய ஆன்மாவுக்குள் ஏற்றிவிடுகிறார் இசையரசர் இளையராஜா, சந்தேகமிருப்பவர்கள் இந்த பாடலை முழுமையாய் ஒரு முறை கேட்டுவிட்டு, அதன்பின் கண்களை மூடி தொடக்கத்தில் வரும் அந்த இசை கோர்வையை காதுகளுக்கு செலுத்தி ஆழமாக கேட்டுப்பாருங்கள் அப்படியே சிலிர்த்துவிடும், இப்படியான பாடலை தான் முழு ஊடரங்கினால் அமைதியாய் இருக்கும் ஞாயிறின் புலரும் காலை பொழுதில், ஒரு 6 மணிக்கு சுற்றிலும் அடுத்த போக விளைச்சலுக்காக காத்திருக்கும் வெட்ட வெளியான வயல்வெளிகளை பார்த்தபடி, முந்தய நாள் இரவு பெய்த மழையின் வாசம் மாறாத காலை காற்றை உள்வாங்கி வாங்கியபடி, யாருமற்ற சாலையில், இந்த பாடலை ஒலிவாங்கியின் வழியாக காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே நடந்தால், அந்த நாள் எப்படியானதாக இருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விடுகிறேன், அதுவும் இந்த பாடலின் வரிகளை பற்றி பல மேடைகளில் இளையராஜா அவர்கள் சொன்னதை விட பெரியதாக எதுவும் சொல்ல போவதில்லை, இந்த பாடலில் நாயகன் நாயகி இருவரும் தங்களுக்குள் உழன்று கொண்டிருக்கும் பிரிவின் தாபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், அதிலும் நிறைய வார்த்தைகள் கேள்விகளாக முற்றுபெறும், உதாரணமாக நாயகி எனைத்தான் அன்பே மறந்தாயோ, அதற்கு பதில், நாயகன் மறப்பேன் என்றே நினைத்தைதாயோ என இந்த இரண்டு பேரின் வார்த்தைகளுமே ஏக்கத்தோடு கூடிய கேள்விகளாகவே முடியுமிடத்தை, பாடியிருக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் சரி, ஜானகி அவர்களும் சரி உச்சரிப்பில் வாழ்ந்திருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் சாதாரணமான வார்த்தை, ஒவ்வொருவரின் உச்சரிப்பும் அவரவரவர் ஆன்மாவிலிருந்து வெளிப்பட்டிருக்கும், இன்னும் இன்னும் இந்த பாடலின் இசைகோர்வையை பற்றி, படமாக்கப்பட்ட விதம் பற்றி, பங்குப்பெற்ற நடிகர்கள் பற்றி, நிறைய நிறைய சொல்லிக்கொண்டே போக எக்கச்சக்கமாய் இருக்கிறது நீளம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்… மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *