வாழ்ந்து பார்த்த தருணம்…101

இதய நரம்பு கம்பிகளில் ஊடுருவி ஆன்மாவில் நடனமாடும் நர்த்தகி….

பல்வேறு விஷயங்களை பற்றி நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இசையைப் பற்றி நிறைய எழுதியதில்லை. எப்பொழுதுமே அந்த நேரத்தின் தன்மையை பொறுத்து அப்பொழுதைய நிலையில் என்னை பாதித்துக் கொண்டிருக்கும், ஏதாவது பாடலையோ அல்லது இசை கோர்வையையோ பற்றி எழுதுவேன். அத்தோடு சரி. அதன்பின் இயல்பான வேறு விஷயங்களை பற்றி எழுதுவதுண்டு. ஆனால் இசையைப் பற்றி எழுதியதில்லை. ஆனால் இசையைப் பற்றி தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்ற பேராவல் ஆன்மாவுக்குள் அலையடித்தபடி இருந்தது. எப்பொழுதுமே ஒரு விஷயத்தை பற்றி நாம் ஆழமாக ஆன்மாவினுள் எண்ணியபடி இருந்தால், அந்த ஆழ்மன ஈர்ப்பே பல உன்னதமான விஷயங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். அப்படியான சேர்த்தலின் வழியே தான் சில இசை தொகுப்புகளை கேட்க முடிந்தது. பொதுவாக எனக்கு இசைகருவிகளில் எந்த இசை கருவி மிகவும் பிடித்தமானது என என்னை நல்ல தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வயலின் தான் என மின்னல் வேகத்தில் சொல்லிவிடுவேன். அதற்கானக் காரணம் என்ன என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். இப்பொழுது சொல்ல வந்த விஷயமே வேறு. இப்பொழுது இசையைப் பற்றி எழுத வேண்டும் என எழுதுகிறாயே உனக்கு இசையைப் பற்றி என்னத் தெரியும் என வேறு யாராவது என்னை நோக்கி கேட்பதற்குள், நானே என்னை நோக்கி அப்படியான கேள்வியைக் கேட்டால், என்னுள் இருந்து வந்த பதில், கண்டிப்பாக இசையைப் பற்றி, அதன் இலக்கணம் பற்றி ஒரு ஈரவெங்காயமும் எனக்கு தெரியாது. ஆனால் என்னுள் என்னுடைய ரசனையுடன், ரசிப்புத் திறனுடன் ஒத்துப் போகும் இசையை என்னுடைய ஆன்மாவுக்குள் செலுத்தி மிக, மிக உயிர்ப்புடன் ரசித்து லயித்து கேட்கக் கூடிய மிக பெரும் ரசிகன் இருக்கிறான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படியான நிலையில் இருந்தே இந்தக் கட்டுரை. இதனைத் தொடர்ந்து கண்டிப்பாக குறைந்தது ஐந்து கட்டுரைகளாவது என்னுடைய இசை ரசனைக்குட்பட்ட இசைக்கோர்வைகளை பற்றி வரும். இசையைப் பற்றி ஒரு சாதாரண இசை ரசிகனிடம் இருந்து வெளிபடுவதை எல்லாம் என்னால் படிக்க முடியாது என யோசிப்பவர்கள் இதுவரை படித்தற்கே, மிகப்பெரும் நன்றிகள். இதற்கு மேல் உங்களின் நேரத்தை இந்த சராசரியான ரசிகனின் எழுத்துக்காக வீணாக்காமல் அப்படியேக் கிளம்பி விடலாம்.

இந்திய இசையை தாண்டி சர்வதேச இசையை கேட்பதற்காக எப்பொழுதும் ஒரு வேலை செய்வேன். அது என்னவெனில், இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிப்பரப்பாகும் இந்த குரல் தேடல் நிகழ்ச்சிகள் இருக்கிறது இல்லையா?. அந்த நிகழ்ச்சிகள் எல்லாமே, இதற்கு முன்னரே பல்வேறு நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல்வேறு குரல் தேர்வு நிகழ்ச்சிகளின் நகல்கள் தான். அப்படி இதற்கு முன்னர் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குரல் தேர்வு நிகழ்ச்சிகளை, இன்று போய் இணையத்தில் யூடுபில் தேடினாலும் எக்கச்சக்கமாய் வந்து விழும். இசையைப் பற்றிய தொடர்ச்சியான தேடலில் இப்படியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பதுண்டு. பொதுவாக இணைய வெளியில் நீங்கள் தொடர்ச்சியாக எப்படியான நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அது சம்பந்தமான நிகழ்ச்சிகளாகவே உங்கள் கண்முன் வந்து அணிவகுத்தபடி இருக்கும். இணையத்தின் வடிவமைப்பே அப்படித்தான். இப்படியேp போய் கொண்டிருக்கையில், அப்படியாய் இணையத்தில் பரிந்துரைக்கப்பட்ட அணிவகுப்பில் ஒரு குறிப்பிட்ட நபரின் இசை தொகுப்பு கண்ணில் பட்டபடியே இருந்தது. அந்த நபரின் பெயர் Alan Milan, Alan Milan ஒரு இளம் வயது வயலின் இசைஞன். சரி அடிக்கடி Alan Milan வயலின் இசை நம் கண்முன் கண்ணாமூச்சுk காட்டிk கொண்டிருக்கிறதே என, அவரின் வயலின் இசை ஒன்றை ஒலி வாங்கியை காதுகளில் பொருத்தி ஓடவிட்டால். மனம் இறகை போல் மிக இலகுவாகி அப்படியே பறக்க ஆரம்பித்தது. அந்த பறத்தல் எப்படி இருந்தது என்றால், காற்றில் பறக்கும் இறகு ஒன்றை நீங்கள் ஊதி, ஊதி பறக்க வீடுவீர்கள் இல்லையா. அப்பொழுது ஒரு உற்சாகமான மனநிலை உங்களுக்குள் ஊற்றெடுத்து பரவ ஆரம்பிக்கும் இல்லையா அப்படி இருந்தது.

சரி அது Alan Milan என்கிற வயலின் இசைஞனின் சொந்த இசை கோர்வையா என்றால் அதுவும் இல்லை. அது ஏற்கனவே உலக அளவில் பலபேரை பைத்தியம் பிடிக்க வைத்த ஒரு ஆங்கிலப் பாடல் தொகுப்பின் ஒற்றைப் பாடலுடைய வயலின் இசை வடிவம். அந்தப் பாடலின் பெயர் SEÑORITA. இந்தப் பாடலை கண்டைந்தே Alan Milanனின் வயலின் இசையை கேட்ட பிறகு தான். SEÑORITA என்கிற பாடலை பாடியவர்கள் Shawn Mendes, Camila Cabello என்கிற இருவர். அதிலும் கமிலாவினுடைய குரல் இருக்கிறது இல்லையா. அது அப்படியே உங்களின் மனதை உருக்கி, பிசைந்து, சுற்றவைத்து என்னவெல்லாமோ செய்யும். இந்த பாடலை யூடுபில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அதற்குச் சாட்சி. இன்னும் பல ஆண்டுகள் இந்த பாடலின் தாக்கம் இணையத்தை கதற விடும் என்பது உறுதி. பொதுவாக ஒரு பாடல் சம்பந்தமே இல்லாமல் உலக அளவில் கவனம் பெற்று எல்லோரையுமே முணு முணுக்க வைக்கும். ஆனால் அப்படியான பாடலின் தாக்கம் சில சமயங்களில் அந்த நேரத்தைத் தாண்டி இருக்காது. காரணம், அதன் ஆன்மா நீண்டு பயணிக்க கூடியது அல்ல. ஆனால் SEÑORITA அப்படியானது இல்லை. எப்பொழுது கேட்டாலும், இது வேறு ஒரு தளத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கக் கூடியது. இவ்வளவு பெரிய தாக்கத்தை உலகம் முழுக்க ஏற்படுத்திய பாடலை ஒரு இளம் வயலின் இசைஞன் வாசிக்கிறான் என்றால், அந்த அசல் பாடலின் ஆன்மாவை தன்னுடைய வயலின் தந்தி கம்பிகளுக்குள் அடக்குவதே பெரிய விஷயம் தான். காரணம் எற்கனவே மிகப்பெரிய அளவில் புகழடைந்துவிட்ட ஒரு பாடலை எடுத்து வாசிக்கையில் ஒரு சின்ன பிசிறு அடித்தாலும் முடிந்தது கதை. ஆனால் Alan Milanனின் கைகளினால் மீட்டப்படும் வயலின் தந்திகம்பிகள், அசல் பாடலின் ஆன்மாவை தக்கவைத்தபடியே, அந்த பாடலை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறது. வாய்ப்பேயில்லை. SEÑORITA பாடலை எத்தனை முறை கேட்கிறேனோ, அதனை விட மிக, மிக அதிகமாக Alan Milanனின் வயலின் இசைக்குள் கரைந்து போகிறேன். SEÑORITA பாடலுக்கான Alan Milanனின் வயலின் இசையும் மற்றும் SEÑORITA என்கிற அசல் பாடலினையுன் தேடிப் பாருங்கள். இசையை ரசிப்பவர்கள் கேட்டுக் கரைந்து போகலாம். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *