வாழ்ந்து பார்த்த தருணம்…104

தன் காந்தக் குரலின் லயத்தினால் வசீகரித்து வீழ்த்தியவள்…

அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து, அன்றைய பயிற்சியை தொடங்கலாம் என முதல் தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை திறந்தவுடன் சில்லென்ற காற்று முகத்தில் வருட மலை வரும் போல் இருந்தது. சரி என காலை வழக்கம் போல் மூச்சுp பயிற்சி, தியானம் என சென்று கொண்டிருக்கும் போதே லேசான சாரல் முதுகின் மீது விழுந்தது. பயிற்சி செய்து கொண்டிருந்தது வீட்டின் முதல் தளத்தின் வெளிப்புற மாடம்(பால்கனி) என்பதால், மழைச் சாரல் எளிதாக உடலை நனைக்கும். அப்படி முதுகில் மழைத் துளியின் சாரல் பட்டவுடன், அமர்ந்து பயிற்சி செய்து கொண்டிருக்கும் இடத்தை மாற்றி அமர்ந்து பயிற்சியை முடித்துவிட்டுப் பார்த்தால், சாரல் நின்றிருந்தது. அடுத்ததாக உடற்பயிற்சி முடித்து உடம்பு தளர்வானவுடன், அப்படியே ஒரு நடை போகலாம் என கீழ் இறங்கிப் போனால், நண்பன் ஒருவன் தன்னுடைய மிதி வண்டியை எடுத்துக்கொண்டு மட்டையாட்டம் விளையாட வந்திருந்தான். சரி இன்றைக்கு நடைக்கு பதிலாக மிதி வண்டியை எடுத்துக் கொண்டு போகலாம் என முடிவெடுத்துப் பார்த்தால், அவன் கொண்டு வந்திருந்த மிதிவண்டியின் நிறம் வெள்ளை, என்னுடைய ஒலிவாங்கியின் நிறமும் வெள்ளை, ஏன் இரண்டுமே ஒரே நிறமாக இருந்தால் தான் உங்கள் காதுகளில் பாடல் கேட்குமா என்றெல்லாம் கேட்க கூடாது. மீறி கேட்டால் அழுதுடுவேன் ஆமா. அது இன்றைக்கு அப்படி அமைந்தது எனச் சொன்னேன் அவ்வளவு தான் சரியா. சரி நிற ஒற்றுமை சிறப்பாக தான் இருக்கிறது எனச் சாலையில் இறங்கினால், இந்த பூமியை முத்தமிடலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்கும் மேகங்கள், சற்று நேரத்துக்கு முன் முழுமையாய் முத்தமிடாமல் விட்ட மழை சாரலின் துளிகளின் மிச்சம் இந்த மண்ணை நனைத்திருக்க, இந்த பூமி மீது பதிந்திருந்த சாரல் முத்தத்தின் வாசம் காற்றில் கலந்து அப்படி நாசிக்குள் நுழைந்தது. பிரதான சாலை மீண்டும் நம்மை இந்த மழை நனைக்குமா நனைக்காதா என காத்துக் கொண்டிருக்க, மிதிவண்டியில் ஏறுவதற்கு முன்னதாக ஒலிவாங்கியை காதில் பொறுத்தி அவளின் குரலை ஒலிக்க விட்டால், என்னுடைய மனத்திற்குள் தன் குரலால் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த அந்தப் பாடலின் குரலுக்கு சொந்தமானவளின் பெயர் Alicia Keys.

தன்னுடைய காந்தக் குரலால் என்னை வீழ்த்திய Alicia Keysனுடைய அந்தப் பாடலின் பெயர் fallin. பாடலின் தலைப்பை தமிழில் சொல்வதனால் விழு எனக் கொள்ளலாம். எதில் விழப்போகிறோம் என யோசித்தால் கண்டிப்பாக Alicia Keysனுடைய காந்த குரலில் தான். அதில் துளியளவும் சந்தேகமேயில்லை. Alicia Keys எனக்கு அறிமுகம் ஆனது எப்படியெனில், சர்வதேச குரல் தேடல் மேடையில் விருப்ப குறியீட்டினை தாங்கி நிற்கும் சுழல் நாற்காலியில், உலக அளவில் மிகப் பிரபலமான பல்வேறு பாடகர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அதில் சில பேரின் உடல் பாவணைகளும், அவர்களின் உடைகளும், அப்படியே அவர்களிடம் இருந்து வெளிப்படும் நுணுக்கமான சின்ன சின்ன குழந்தைதனமான சேட்டைகளும், ஒவ்வொருவரையும் தனித்துவமாய் காட்டிகொண்டிருக்கும். அப்படியான பாடகர்களில் தன்னுடைய குறும்பான பல நடவடிக்கைகளால் பெரிதும் விரும்பிய பாடகி தான் அமெரிக்க பாடகியான Alicia Keys. ஆனாலும் அவரின் fallin பாடல் அறிமுகமாகிய கதையே வேறு. ஹாலந்து நாட்டில் 2018ல் நடந்த சர்வதேச குரல் தேடல் மேடை ஒன்றில், ஒரு சிறுவயது பெண் இந்த fallin பாடலை பாடத் தொடங்கிய 15வது நொடியில், விருப்பகுறியீட்டின் பின்னனியில் சுழல் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நான்கு நடுவர்களும் ஒரே நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன் திரும்ப, அந்த மேடையே அதிர ஆரம்பித்தது. அந்த மேடையும், அந்தப் பாடலும், அந்தப் பாடல் கொடுத்த ஒரு விதமான சொல்லமுடியாத மிதமான போதையும், அசலானப் பாடலை இணையத்தில் போய் தேடத் தூண்ட, தேடினால், ஏற்கனவே தன்னுடைய குறும்பான நடவடிக்கையால் என்னுடைய விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துவிட்ட Alicia Keys என்கிற பேரழகியின் மயக்கும் குரலில் தான் அந்தப் பாடலே என்றவுடன் என் மனம் அப்படியே துள்ளியது. இந்தப் பாடல் 2001ல் வெளியான பாடல். இன்றைக்கு வரை இணையத்தின் யூடுபில் 20கோடி பேரை கிறங்கடித்து இன்னும் இன்னும் மேலே போய் பார்வைகளை ஏற்றிக் கொண்டே இருக்கிறது.

என்னளவில் இந்தப் பாடலை குரல் தேடல் போன்ற மேடைகளில் பாடுவது சற்றே கடினம். கொஞ்சமாய் பிசக்கினாலும் மொத்தமாக பாடலின் அடிப்படைத் தன்மையே பல்லிளித்து விடும் அபாயம் உண்டு. அப்படியான பாடலை மேடையில் தேர்ந்தெடுத்து பாடுவதே சிறப்பானதொரு சவால் தான். எனக்கு இந்தப் பாடலை அறிமுகப்படுத்திய ஹாலந்து நாட்டின் குரல் தேடல் மேடையில் பாடிய Montana என்கிற அந்தப் பதின்ம வயது பெண்ணும், மிக, மிகச் சிறப்பாகவே அந்த பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது, அது பாடப்பட்ட தன்மை தான். அடித்து நொறுக்கும்படியான தாளகதியை எடுத்துக்கொண்டு, அதனை மிக, மிக நிதானமாக லயித்து வாசித்து பாடினால் எப்படியிருக்கும், அப்படியான பாடல் தான் இந்தப் பாடல். இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை மொழி பெயர்த்தால், நான் வீழ்கிறேன், அன்பினுள்ளும், அதற்கு அப்பாலும் உன்னுடன் எனத் தொடங்கும், அந்தப் பாடலின் வரிகள் பாடப்படுவதற்கு முன்னால், அ ஆ ஆ என ஒரு வித குழைவுடன் Alicia Keys குரலில் தெறியாக ஆரம்பிக்கும் பாருங்கள், அந்தப் புள்ளியில் இருந்து Alicia Keysன் கந்தர்வ காந்த குரலின் ஆட்டம் சிறப்பாக ஆரம்பித்து விடும். முழுப்பாடலின் வரிகளுமே அதகளமாய் தான் இருக்கும். விருப்பமிருப்பவர்கள் இணையத்தில் தேடிப் படித்து உய்யுங்கள். இந்தப் பாடலின் காணொளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய காதலனை சிறையில் சென்று சந்திப்பார் Alicia Keys. அந்தத் தருணத்தில் இருவருக்குமான உரையாடல் ஒரு கண்ணாடி சுவற்றுக்கு அப்பால் இருக்கும் தொலைப்பேசியின் வழியே நடக்கும், அந்த தருணத்தில் சிறையில் கண்ணாடி சுவற்றுக்கு அந்தபுறம் இருக்கும் காதலனை பார்த்துக் கொண்டே தொலைப்பேசியை எடுத்து காதில் வைப்பார், அப்பொழுது அந்தப் பார்வையில் ஏக்கம் கலந்து காதல் ஒன்று தெறிக்கும் பாருங்கள், யப்பா சாமி, அப்படியே அதன் பின் காதலுடன் பேசிவிட்டு எழுவது, கடைசியாக ஒரு முறை காதலன் சிறை கம்பிகளுக்குள் மறையும் முன்னர் அவனைப் பார்ப்பது என அனைத்திலும் Alicia Keys கண்களில் தெறிக்கும் அந்த காதலின் ஏக்கமும், அவரின் அந்த காந்த கந்தர்வ குரலும், வாய்ப்பேயில்லை. அப்படியே பாடலின் அந்தத் தருணத்தை உணர்ந்து பார்ப்பவர்களை உறைய வைத்துவிடுவார். Alicia Keys ஏன் காந்த கந்தர்வ குரல் கொண்ட பேரழகி எனச் சொல்கிறேன் என்பதை இந்தப் பாடலின் காணொளி பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள், மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *